தாராபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் பூபதி (36). இவரை நேற்று இரவு தாராபுரம் பேருந்து நிலையத்தில் 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராட்சிபுரத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ்(44) மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர் பூபதிக்கும் இடையே, பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இவர்கள் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் இருப்பதும், முன்விரோதத்தில் செல்வராஜ், நண்பர்களுடன் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.