தென்னிந்தியாவின் முதல் எல்இடி தியேட்டர்: அல்லு அர்ஜூன் திறந்தார்

சினிமா திரையீடு என்பது பழைய புரொஜக்டர் என்பது மாறி இற்போது டிஜிட்டல் திரையீட்டுக்கு வந்திருக்கிறது. புரொஜக்டர் காலத்தில் அதற்கென்று தனி அறை, வெப்பத்தையும், வெளிச்சத்தையும் உமிழும் கார்பன் கட்டை பிலிம்களை கொண்ட ரீல்கள் என பல விஷயங்கள் இருக்கும். தற்போது டிஜிட்டல் புரொஜக்சன் பாக்ஸ் போதுமானது. இதன் அடுத்த கட்டமாக வருகிறது எல்இடி திரையீடு. இதற்கு எதுவுமே தேவையில்லை. நம் வீட்டில் டிவி, கம்ப்யூட்டர் ஸ்கிரீன்களுக்கு உள்ளிருந்தே வெளிச்சமும், காட்சிகளும் வெளிப்படுவதை போன்று திரையிலிருந்தே அனைத்தும் காட்சிப்படுத்தப்படும். இதனை இயக்க ஒரு லேப்டாப் போதும்.

தென் இந்தியாவிலேயே முதல் எல்இடி திரை கொண்ட தியேட்டரை அல்லு அர்ஜூன் தனது ஏஏஏ சினிமாஸ் சார்பில் திறந்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் இது அமைந்துள்ளது. இதனை அல்லு அர்ஜூன் நேற்று திறந்து வைத்தார். இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தியேட்டர் குறித்து சுனில் நரங் கூறுகையில், இந்த வளாகத்தின் மொத்த பரப்பளவு மூன்று லட்சம் சதுர அடி. மூன்றாவது தளத்தில் உணவு விடுதி 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. ஏஏஏ சினிமாஸின் நான்காவது மாடியில் ஐந்து திரைகளுடன் கூடிய திரையரங்கு உள்ளது. திரை எண் 2 இல் எல்இடி திரை உள்ளது. தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ஏஏஏ சினிமாஸ் மட்டுமே. இதற்கு புரொஜக்ஷன் தேவையில்லை. ஆனால், திரையிடல் மிகவும் தெளிவாக இருப்பதோடு சிறப்பான திரை அனுபவத்தையும் தரும்'' என்றார்.

அல்லு அரவிந்த் கூறுகையில், “ஏஏஏ சினிமாஸ் உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. சுனில் நரங் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளார். தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ஏஏஏ சினிமாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு டீம் வொர்க் மற்றும் சுனில் நரங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏஏஏ சினிமாஸை மிக பிரமாண்டமாக அமைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.