தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி தான்.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இருவர் இணைந்துள்ள இப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் படபிடிப்பானது வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாள் வருவதை ஒட்டி, லியோ படத்தின் அப்டேட் ஏதாவது வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் தருவதை உறுதி செய்தார். அவர் உறுதி செய்து அடுத்த நிமிடமே போஸ்டர் ஒன்றினை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவர் வெளியிட்டவுடன் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
வெளியான போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியுடனும், விஜய்க்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் மது குவளைகளை கையில் ஏந்தி இருக்கும் படியும் காட்சிகள் அமைந்துள்ளது. இந்த போஸ்டரானது விஜய் ரசிகர்களை அல்லாத பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அரசியல் ஆசையில் அடுத்தடுத்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நடிகர் விஜய், இவ்வாறு சமூக பொறுப்பில்லாமல் ஒரு படத்தினை வெளியிடலாமா?
ஏற்கனவே தமிழகம், மதுப்பழக்கத்தினாலும், புகைப்பழக்கத்தினாலும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில். அதனை ஊக்குவிக்கும் விதமாக மது குவளைகளையும், புகைப்பிடிப்பதையும் கட்சியாக வைத்து ஒரு படத்தினை வெளியிடலாமா என்ற கண்டன குரலும் எழுந்துள்ளது.
படத்தின் தொடக்கத்தில் புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், மது குடிப்பது உடல்நலத்தை பாதிக்கும் என தெரிவித்து விட்டு, பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் நடிகர் விஜய், இவ்வாறான படத்தினை வெளியிட்டது அவரது சமூகப் பொறுப்பை கேள்விக்குறியாகி உள்ளது.
மிகக் குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய படத்தின் போஸ்டரை இவ்வாறு வடிவமைத்து வெளியிட்டு இருப்பது அவரது சமூகப் பொறுப்பின் மீதும் கேள்விக்குறியை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜயின் ரசிகர்களால் இப்படமானது கொண்டாடப்பட்டாலும் பொதுவான மக்களிடையே சர்ச்சையை தான் ஏற்படுத்தி இருக்கிறது.
முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கவுரவிக்க வேண்டும், இரத்த தானம் வழங்க வேண்டுமென்று ஒரு பக்கம் சமூக பொறுப்புடன் செயல்படும் நடிகர் விஜய், அது அத்தனையையும் சுக்குநூறாக்கி புகை, மது பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, அதனை ஹீரோயிசமாக காட்சிப்படுத்துவதை இனி நடிகர் விஜய் நிறுத்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.
அதேபோல் இனி வரும் போஸ்டர்களில் இப்படியான காட்சிகள் வராமல் படக்குழுவும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்