நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இருவர் இணைந்துள்ள இப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
படத்தின் படபிடிப்பானது வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாள் வருவதை ஒட்டி, லியோ படத்தின் போஸ்டர் ஒன்றினை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
வெளியான போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியுடனும், விஜய்க்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் மது குவளைகளை கையில் ஏந்தி இருக்கும் படியும் காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த போஸ்டரானது விஜய் ரசிகர்களை அல்லாத பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கவுரவிக்க வேண்டும், இரத்த தானம் வழங்க வேண்டுமென்று ஒரு பக்கம் சமூக பொறுப்புடன் செயல்படும் நடிகர் விஜய், அது அத்தனையையும் சுக்குநூறாக்கி புகை, மது பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, அதனை ஹீரோயிசமாக காட்சிப்படுத்துவதை நடிகர் விஜய் இனி நிறுத்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் டிவிட்டர் செய்திக்குறிப்பில், “நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.
புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது.
எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.