உதகை: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தோடரின மாணவியான நீத்து சின் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நீட் தேர்வில் வெல்லும் முதல் தோடரின மாணவி இவர்தான்.
நடப்பாண்டு நீட் நுழைவு தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 691 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் 13-ம் தேதி இரவு வெளியிடப்பட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி நீத்து சின் தேர்ச்சி பெற்றுள்ளார்.
உதகை கார்டன் மந்தைச் சேர்ந்த நார்ஷ்தோர் குட்டன், நித்யா தம்பதியின் மகளான இவர், நீட் தேர்ச்சி பெற்ற முதல் தோடர் இன மாணவி ஆவார். மேலும், மருத்துவம் படிக்கப் போகும் முதல் மாணவி என்ற பெருமைக்குரியவர் என தோடரின மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நீத்து சின் கூறும் போது, ‘‘எங்கள் தோடரினத்திலிருந்து மருத்துவம் படிக்கும் முதல் மாணவியாக நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவம் பயின்று, வசதியற்றவர்களுக்கும், எங்கள் சமுதாயத்துக்கும் சேவை புரிவதே எனது நோக்கம்’ என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் ப்ரியா நாஷ்மிகர் கூறும்போது, ‘‘தோடர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நீத்து சின் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இவர், தோடர் பழங்குடியினத்திலிருந்து வரப் போகும் முதல் மருத்துவர். இது பெரிய சாதனை. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இவருக்கு கைகொடுத்தது. இவரின் சாதனை தோடர் பழங்குடியினருக்கு பெருமை சேர்ப்பதாகும்.
உத்வேகம் தரும்: இவரது வெற்றிக்குப் பிறகு, பழங்குடியினக் குழந்தைகள் அனைவரும் உத்வேகத்துடன், தடைகளைத் தகர்த்து பெரிய உயரங்களை எட்டுவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.
நீத்து சின் நீட் தேர்வில் 145 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். எஸ்டி பிரிவு மாணவர்கள்தேர்ச்சி பெற 109 மதிப்பெண்கள் போதுமானது.