நெல்லை மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தவர் பெருமாள். அவர் முகநூலில் ஆக்டிவாக இருந்து வந்திருக்கிறார். ’நெல்லை பெருமாள்’ என்ற பெயரில் முகநூலில் செயல்பட்ட அவர், முதல்வர் குறித்து அவதூறு கருத்தைப் பதிவிட்டதாகத் தெரிகிறது. இது குறித்து அறிந்த நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சிலம்பரசன், அவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
தலைமைக் காவலர் பெருமாளின் பதிவைப் பார்த்த தி.மு.க-வினர் கொந்தளித்திருக்கின்றனர். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ-வும் தி.மு.க-வின் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளருமான மாலைராஜா தலைமையிலான கட்சி நிர்வாகிகள், நெல்லை மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து தலைமைக் காவலர் பெருமாள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ-வான மாலைராஜா, “அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டதைக் கொச்சைப்படுத்தும் வகையில், பெருமாள் என்பவர் பதிவிட்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. காரணம், அந்தப் பதிவைப் போட்டவர் காவல்துறை உடையில் உள்ள தனது படத்தையும் பதிவிட்டிருந்தார்.
முதல்வர்மீது துவேஷத்துடன் அருவருக்கத்தக்க வகையில் காவலர் ஒருவரே முகநூலில் பதிவிட்டதைக் கண்டு என்னைப்போலவே கட்சியினர் பலரும் ஆத்திரமடைந்தார்கள். அவர்கள் என்னிடம் இது பற்றி பேசியதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் செய்வோம் என்று சொன்னேன். அத்துடன், என்னுடன் வந்த கட்சிக்காரர்களுடன் மாவட்ட எஸ்.பி-யைச் சந்தித்துப் புகார் மனு அளித்தேன்.
முதல்வர்மீது அவதூறு கருத்தைப் பதிவிட்ட முதல் நிலைக் காவலர் பெருமாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய காவலரே இது போன்று அநாகரிகமாக நடந்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது, மன்னிக்க முடியாதது. அவர்மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்” என்றார்.