பணிந்தார் ஆளுநர் ரவி.. செந்தில் பாலாஜி இலாகா மாற்றத்துக்கு ஒப்புதல்.. கடைசியில் வச்சாருல்ல ட்விஸ்ட்டு!

சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு ஆகிய இலாக்காக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒருவழியாக ஒப்புதல் அளித்துள்ளார். இருந்தபோதிலும், செந்தில் பாலாஜி அமைச்ரவயைில் நீடிப்பதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்ததுசாமிக்கும் பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, இதுதொடர்பான பரிந்துரைகளை தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கே அதை திருப்பி அனுப்பினார். அதாவது, முதல்வர் தெரிவித்துள்ள காரணங்கள் தவறாக இருப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயல், ஏற்கனவே தகித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு அமைச்சர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். அதில், அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்காவிட்டால் அரசாணையை பிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், ஆளுநர் மாளிகை தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆளுநரின் முதன்மைச் செயலர் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில், “தமிழக முதல்வரின் பரிந்துரைக்கு ஏற்ப, செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்ததுசாமிக்கும் ஒதுக்கப்படுகிறது. அதே சமயத்தில், கிரிமினல் குற்ற வழக்கை சந்தித்து வருபவரும், நீதிமன்றக் காவலில் இருப்பவருமான செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதை ஆளுநர் விரும்பவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.