திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
ஆரோக்கிய மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், கடந்தாண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட சாமியானா பந்தல் கீழே 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருந்தனர். காற்றின் வேகத்தால் சாமியானா பந்தல் திடீரென சாய்ந்ததில், 10-ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட் போலீசார் பள்ளிக்கு சென்று பந்தல் அமைத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.