பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்தொல்லை..டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் விழுப்புரம் கோர்ட் இன்று தீர்ப்பு

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் – ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டிஜிபி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக ராஜேஸ்தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது. அதுபோல் முன்னாள் சிறப்பு டிஜிபி செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ். பி தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜேஸ்தாஸ் நேரில் ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

Woman IPS officer alleges DGP Rajesh Das sexually harassed Verdict today in Vilupuram court

அதனை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். அதன் பிறகு ராஜேஸ்தாஸ் தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். காவல்துறையில் உயர் பதவியில் இருந்த முன்னாள் டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்த வழக்கு கடந்த 2 வருடமாக நடந்து வந்த நிலையில் இன்றைய தினம் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளிக்க உள்ளார். பாலியல் தொல்லை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.