''பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பாஜக உணர்ந்துவிட்டது''- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

சென்னை: “இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது மற்றும் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் இன்று கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக பொருளாளர் டிஆர் பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆ.ராசா எம்பி, முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்கு பின் தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி!.

இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும்.

வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.