இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைக்க முயன்றது. இதனையடுத்து வன்முறை கும்பலுக்கும் அதிவிரைவுப் படை போலீஸுக்கும் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலை விரட்டியடித்தனர்.
மணிப்பூரில் குக்கி பழங்குடிகள்- மைத்தேயி இனக்குழு இடையேயான மோதல் மே 3-ந் தேதி முதல் நிகழ்ந்து வருகிறது. இந்த மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக சொந்த மாநிலத்திலும் பிற மாநிலங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் குக்கி இன மக்கள் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.
மணிப்பூரில் அமைதி முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் முகாமிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனாலும் இந்த வன்முறை ஓயவில்லை. மணிப்பூரில் தற்போதைய நிலையில் 50000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் குக்கி, மைத்தேயி இனக்குழுவினர் பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்தும் மியான்மரில் இருந்து கடத்தி வந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று மாலை மணிப்பூர் தலைநகர் இம்பாலில், வன்முறை கும்பல் ஒன்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டுக்கு தீ வைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த அதி விரைவுப்படை போலீசார், வன்முறை கும்பல் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தனர். அப்போது வன்முறை கும்பலுக்கும் அதி விரைவுப்படை போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டுக்கு வைக்கப்பட்ட தீ, பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர்.
மணிப்பூரில் நேற்று மத்திய அமைச்சர் வீட்டுக்கு 1,000க்கும் மேற்பட்டோரை கொண்ட வன்முறை கும்பல் தீ வைத்தது. அதற்கு முன்னதாக மாநில பெண் அமைச்சர் ஒருவரது வீட்டுக்கும் வன்முறை கும்பல் தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.