ஆளும் கட்சி எம்.பி ஒருவரின் வீடு புகுந்து அவரது மனைவி, மகன் மற்றும் ஆடிட்டரை காரில் கடத்திச்சென்று 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடியை ஆந்திர போலீசார் சினிமா பாணியில் விரட்டிச்சென்று துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்துள்ளனர்
எம்.பியின் மனைவி, மகன் மற்றும் ஆட்டிட்டரை வீடு புகுந்து தூக்கிய வழக்கில் சிக்கிய உள்ள தாதா ஹேமந்த் இவர் தான்..!
ஆந்திராவின் ஆளும் கட்சியான, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சத்திய நாராயணா.
சினிமா தயாரிப்பாளரான இவர் ருசிகொண்டா பகுதியில் பிரமாண்டமான பங்களா கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று சத்தியநாராயணா தொழில் தொடர்பாக ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் காலை அவருடைய வீட்டுக்கு வந்த பிரபல தாதா ஹேமந்த் உள்ளிட்ட நான்கு பேர் கும்பல் உள்ளே புகுந்து சத்தியநாராயணாவின் மனைவி ஜோதியிடம் துப்பாக்கியை காண்பித்து கடுமையாக மிரட்டி ஆடிட்டரை வீட்டுக்கு வரவைத்துள்ளனர்,
ஆடிட்டரை அடித்து உதைத்து சத்ய நாராயணாவால் உடனடியாக எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னர், சத்யநாராயணாவின் மனைவி ஜோதி, அவருடைய மகன், ஆடிட்டர் வெங்கடேஸ்வரராவ் ஆகிய 3 பேரையும் காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது.
கடத்திச்செல்லும் வழியில் , மனைவி மூலமாக சத்தியநாராயணாவை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது. சம்பவம் குறித்து சத்தியநாராயணா உடனடியாக விசாகப்பட்டினம் போலீசாருக்கு தகவல் அளித்தார்
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து எம்.பியின் மனைவியை கடத்திய கும்பலை தீவிரமாக தேடினர். செல்போன் சிக்னல் அடிப்படையில் அவர்கள் அனந்தபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பல்வேறு காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்து அனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருக்கும் கருப்பு நிற காரை மடக்கிப் பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
போலீசார் தங்களை விரட்டி வருவதை அறிந்து கொண்ட கடத்தல் கும்பல் எம்.பியின் மனைவி , மகன், ஆடிட்டர் ஆகிய மூன்று பேரையும் அனந்தபுரம் அருகே சாலையில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர்.
காரின் டயரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மடக்கிய போலீசார் தப்பிச்சென்ற ரவுடி ஹேமந்த் உள்ளிட்ட 4 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர், பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள ஹேமந்த் , இதே போல செல்வந்தர்களின் வீடுகளை குறிவைத்து குடும்ப உறுப்பினர்களை கடத்தி பணம் பறிப்பதை வாடிக்கையாக செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது