வனத்துறையின் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏன் 10 கோடி? – உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி.!
தமிழகத்தில் வனத்துறையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களை நிரப்பக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத்தரப்பில், பணியாளர்கள் தேர்வுக்கு 10 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்றும், இதற்கு அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையைப் பார்த்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வனத்தை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. காலியிடங்களை நிரப்பாமல் இயற்கை எப்படி பாதுகாக்கப்படும்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப 10 கோடியே 81 லட்சம் ரூபாய் ஏன் தேவைப்படுகிறது? விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுமே; அந்த தொகை எங்கு செல்கிறது?, ஆயிரத்து 161 பேரை தேர்வு செய்ய 10 கோடியே 81 லட்சம் ரூபாய் என்றால், ஒருவரை தேர்வு செய்ய 93 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுகிறதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர், வனத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப 10 கோடியே 81 லட்சம் ஏன் செலவாகிறது?. தேர்வாணையம் உள்ள போது அரசு ஒப்புதல் ஏன் பெற வேண்டும்? காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை ஐந்தாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.