ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு இணங்க கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கிழக்குமாகாண சுகாதார சமூக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் பொதுமக்களுக்கான சேவையினை ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளும் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (15) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஜி. அருணனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்மந்தனாவெளி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 220 நபர்களுக்கான காணி அனுமதிபத்திரம், போஷாக்கு அடைவு மட்டத்தில் குறைந்தவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள், விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணம் மற்றும் முதியோர் அமைப்புக்களுக்கான கதிரைகள் போன்றன அதிகாரிகளினால் கையளிக்கப்பட்டன.
வாகரைப் பிரதேசத்தில் 1000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையினைப் பெற்றுக் கொடுத்த இந் நடமாடும் சேவையில் பிறப்பு, இறப்பு, திருமண பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் காணிப் பிணக்குகள் என்பவற்றிற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இதன்போது வருகை தந்த மக்கள் சுதேச ஆயுர்வேத மற்றும் ஆதார வைத்திய சேவை, காண் பரிசோதனை போன்ற சேவைகளையும் பெற்றுக் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், உதவிப் பிரதேச செயலாளர், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட ஆயுர்வேத வைத்திய அதிகாரி, வாகரை சுகாதார வைத்திய அதிகரிகள், பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.