இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். வன்முறையாளர்கள் அமைச்சர் இல்லத்துக்கு தீவைத்த சம்பவம் குறித்த தகவலை மணிப்பூர் அரசும் உறுதி செய்துள்ளது.
இது குறித்து அமைச்சர் ரஞ்சன் சிங், “நான் இப்போது அலுவல் நிமித்தமாக கேரளாவில் உள்ளேன். நேற்றிரவு என் வீட்டுக்குள் சில விஷமிகள் பெட்ரோல் குண்டுகளுடன் நுழைந்து தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை சேதப்படுத்தியுள்ளனர். நல் வாய்ப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை” என்று ஊடகப் பேட்டியில் கூறினார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மாநிலத்தில் வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக, மணிப்பூரின் கமென்லாக் கிராமத்தில் குகி சமூகத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் மேதேயி சமூகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக குகி சமூகத்தை சேர்ந்த மாநில அமைச்சர் நெம்சாவின் இம்பால் நகரில் உள்ள வீட்டை மர்ம நபர்கள் நேற்றுமுன்தினம் தீ வைத்து எரித்தனர். இதைத் தொடர்ந்து இம்பாலின் நியூ செக்கான் பகுதியில் உள்ள வீடுகளை ஒரு கும்பல் நேற்று தீ வைத்து எரித்தது. தீ வைக்கப்பட்ட வீடுகள் குகி சமூகத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
சம்பவப் பகுதியில் அதிரடிப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு நேற்று பின்னிரவு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இதனால் மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக நேற்று மாநில முதல்வர் என்.பைரன் சிங் பாதுகாப்பு தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்கள் வன்முறையை அடக்குவதில் உறுதியாக உள்ளோம். பல்வேறு கட்டங்களாக பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆளுநர் தலைமையில் அமைதிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களுடனான ஆலோசனை விரைவில் தொடங்கும். வெகு சீக்கிரமாக அமைதியை நிலைநாட்டுவோம். உடனடியாக நிலைமை சீராவது கடினம் ஆனால் மாநிலத்தில் வன்முறைகள் குறைந்து வருகின்றன. வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
கலவரத்தின் பின்னணி என்ன? மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் குகி பழங்குடியினர். கடந்த மே மாதம் முதன்முதலாக நடந்த அமைதிப் பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவி ஒரு மாதத்துக்கும் மேலாக பற்றி எரிகிறது மணிப்பூர் மாநிலம்.
மணிப்பூரின் மேதேயி மக்கள், பெரும்பான்மை இனத்தவர். இவர்கள் மாநிலத்தின் சமவெளிப் பகுதிகளில் வசிக்கிறார்கள். ஆட்சியிலும் அதிகாரத்திலும் இவர்களின் கொடியே அங்கு பறக்கிறது. மணிப்பூரின் புவியமைப்பை பொறுத்தளவில், சமவெளியின் பங்கு குறைவாகவும், மலைப்பாங்கு அதிகமாகவும் கொண்டுள்ளது. மலைப்பாங்கு நெடுக, குகி மற்றும் நாகர் பழங்குடியின மக்களே வசிக்கின்றனர்.
32 உட்பிரிவுகளைக் கொண்ட குகி மக்கள், மெய்தி இனத்தவர் அளவுக்கு முன்னேற வாய்ப்பின்றி பின்தங்கியே உள்ளனர்.
இந்நிலையில் மேதேயி மக்களின் பட்டியலின உரிமை குரலுக்கு, குகி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே சகலத்தையும் ஆக்கிரமித்து முன்னேறி இருக்கும் மேதேயி மக்கள், பழங்குடி பட்டியலுக்குள் வந்தால் தாங்கள் மேலும் நலிவடைந்துவிடுவோம் என அச்சம் தெரிவிக்கின்றனர் குகி மக்கள். இதுதான் இரு தரப்பினருக்கும் இடையேயான போராட்டத்துக்குக் காரணம்.