ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’ 1986-ல் இதே ஜூன் 16-ல்தான் வெளியானது. மதுரையில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஓடி சாதனை படைத்த அந்தப் படம், இன்று 35-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுகுறித்து அதன் நாயகன் ராமராஜனிடம் பேசினேன்.
“என்னோட படங்களில் பெரிய ரெக்கார்டு ஏற்படுத்தின படம் ‘கரகாட்டக்காரன்’. இளையராஜா அண்ணன் இசை, கங்கை அமரன் அண்ணன் இயக்கம், கவுண்டர் அண்ணன், செந்தில் காமெடிகள், கனகா அறிமுகம்ன்னு எல்லாமே அமைஞ்சிருக்கும். அதிலும் அமரண்ணன் டென்ஷனே கொஞ்சமும் இல்லாமல் ரிலாக்ஸாக எடுத்த படம். ஒரு வீட்டுக்குள்ள உட்கார்ந்து யதார்த்தமா பேசிட்டு இருக்கற மாதிரி இயல்பா படத்தை எடுத்திருப்பார். கவுண்டரண்ணன், செந்தில்னு யார்கிட்ட கேட்டாலும், இதைத்தான் சொல்வாங்க. குடும்பத்து நிகழ்வுகள் மாதிரி யதார்த்தமா எடுத்திருப்பாங்க.
ராஜாண்ணன் பாட்டு அவ்வளவும் ரசனையா அமைஞ்சிருக்கும். அந்தப் படம் பெரிய அளவுல ஓடும்னு ஷூட்டிங்லேயே ஓரளவு தெரிஞ்சிடுச்சு. அதனால ரிலீஸுக்கு முன்னாடி, மூணு ஏரியாக்களை வாங்கியிருந்தேன். திருவிழாக்கள்ல கரகாட்டம் பார்த்தீங்னா, அதைப் பெரிய பதவிகள்ல உள்ள அதிகாரிகள் யாரும் பார்க்க வர மாட்டாங்க. ஏன்னா, ராத்திரி பத்தரை மணிக்கு மேல ஆட ஆரம்பிச்சு, நடுராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ஆடிட்டு இருப்பாங்க. கிராமத்து எளியமக்கள்தான் விடிய விடிய கண்விழிச்சுப் பார்த்து ரசிப்பாங்கன்னால, இந்தப் படம் நல்லா போகும்னு நம்பிக்கை இருந்துச்சு.
நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி மதுரை மேலூர் கணேஷ் தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கற வேலையில் இருந்தேன். அந்த தியேட்டர் முதலாளி அம்பலர் ஐயா மீனாட்சி சுந்தரம்ட்ட சேர்த்துவிட்டதனால்தான் சினிமாவுக்குள்ளேயே வந்தேன். அந்த தியேட்டர்ல, நான் நடிச்ச ‘கரகாட்டக்காரன்’ 75 நாள்கள் ஓடி, மேலூர்லேயே அதிகநாள்கள் ஓடின படம்னு எனக்குப் பெயர் வாங்கித் தந்ததை பெரிய பாக்கியமா நினைக்கறேன்.
அப்படிப்பட்ட தியேட்டர்ல என்னோட படத்தின் படப்பிடிப்பை நடத்தணும்னு எனக்கு ஒருமுறைகூட எண்ணினதே இல்லை. ‘சாமானியன்’ படத்துக்காக அழகர்கோவில்ல படப்பிடிப்புக்கு போன போது டைரக்டர் ராகேஷ், ‘அப்படியே மேலூர் கணேஷ் தியேட்டர்லேயும் ஒரே ஒரு ஷாட் எடுத்துட்டு வந்திடுவோம் சார்’னு கேட்டார். அப்படியே ஆச்சரியமாகிட்டேன். நான் வேலை செய்த தியேட்டர்ல நான் படம் பார்க்கற மாதிரி ஒரு காட்சி படமாக்கினாங்க. எனக்கு நெசமாகவே கண்கள் கலங்கிடுச்சு.
இன்னொரு விஷயம், கோவில் இருக்கற வரைக்கும் திருவிழா இருக்கும். திருவிழா இருக்கற வரைக்கும் கரகாட்டம் இருக்கும். ‘கரகாட்டம்’ ஆடுறவரைக்கும் என் நெனப்பு இருக்கும். அதைப் போல ஊர் உலகம் இருக்கற வரைக்கும் பசுமாடு இருக்கும். பசுமாடு இருக்கற வரைக்கும் என் நினைப்பும் இருக்கும். இப்படி ஒரு பெரும் பாக்யத்தை ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கார்” நெகிழ்ந்து மகிழ்கிறார் ராமராஜன்.