ஹைதராபாத்: Adipurush (ஆதிபுருஷ்) ஆதிபுருஷ் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனம் கூறிய ரசிகர் மீது திரையரங்கு வாசலில் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை அடிப்படையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோனி சீதை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
அனுமனுக்கு சீட்: இதற்கிடையே படம் வெளியாகும்போது அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்கென்று ஒரு சீட் ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஆதிபுருஷ் திரையிடப்படும் திரையரங்குகளில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு திரையரங்கில் அனுமனின் புகைப்படம் போட்ட துண்டை சீட்டில் போட்டு இது அனுமனுக்கான சீட் என்று ரசிகர்களுக்கு உணர்த்தியிருந்தது திரையரங்கம். அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் ஹைதராபாத்தில் திரையரங்குக்கு குரங்குகள் வந்ததால் படத்தை பார்க்க அனுமன் வந்துவிட்டார் என ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.
ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்: படத்தின் ட்ரெயலரும், டீசரும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் ஒரு தரப்பினரிடம் இருந்துவந்தது. இன்று படம் வெளியானது காலை முதல் பல ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று ஆதிபுருஷ் படத்தை பார்த்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனங்களும் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.

என்ன பிரச்னை: படத்தை பார்த்தவர்களில் ஒரு தரப்பினர் படத்தின் முதல் பாதி சுமாராக இருக்கிறது என்றும், சிலர் இரண்டாம் பாதி சுமாராக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். ஒருசிலரோ ஒட்டுமொத்த படமுமே திராபையாக இருக்கிறது என்று விமர்சனம் வைக்கின்றனர். அதேசமயம் விமர்சிப்பவர்களின் பொதுவான விமர்சனமாக இருப்பது படத்தில் இருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள்தான்.கார்ட்டூன் காட்சிகளே பரவாயில்லை என்று ஓபனாகவே பேசிவருகின்றனர்.
ரசிகர் மீது தாக்குதல்: இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஒரு திரையரங்கில் ஆதிபுருஷ் படத்தை பார்த்துவிட்டு வரும்போது வெளியில் நின்றிருந்த பத்திரிகையாளர்களிடம் தனது விமர்சனத்தை கூறினார். அந்த விமர்சனத்தில் படத்தில் பின்னணி இசை உள்ளிட்டவைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் கிராஃபிக்ஸ் காட்சிகள் நன்றாக இல்லை. ப்ளே ஸ்டேஷன் கிராஃபிக்ஸ்கூட நன்றாக இருக்கும் என தெரிவித்தார். அப்போது அங்கிருந்த ஆதிபுருஷ் ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கினர்.
#Adipurush – #Prabhas fans beating the public for giving genuine review 🙄
Worst behavior 👍#AdipurushTickets #AdipurushOnJune16pic.twitter.com/zV8waEWm4z— VCD (@VCDtweets) June 16, 2023
இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் அவ்வாறு நடந்துகொண்டவர்கள் மீது கடும் கண்டனத்தையும் பலர் தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு படம் நன்றாக இல்லை என்றால் அதை அப்படித்தான் சொல்ல முடியும். அதைக்கூடவா சகித்துக்கொள்ள முடியாது என்றும் காட்டத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் டல்: இந்தியாவைப் பொறுத்தவரை சில மாநிலங்களில் ஆதிபுருஷ் டிக்கெட் விற்பனை ஜோராக நடந்துவருகிறது என கூறப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாட்டில் படு மந்தமாக இருக்கிறது டிக்கெட் விற்பனை. புக் மை ஷோவில் சென்று பார்த்தால் ஒரு சில சீட்டுகளே புக்காகியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சீட்டுகளை தமிழ்நாடு மக்கள் அனுமனுக்கே கொடுத்துவிட்டனர் என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.