சென்னை: இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள ஆதிபுருஷ் படம் இன்று உலகம் முழுவதும் அதிகளவிலான தியேட்டர்களில் வெளியாகி உள்ளன.
டோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அதிகாலை காட்சிகள் வெளியாகி தியேட்டர்கள் கொண்டாட்ட மோடில் களைகட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் டோட்டலாக ஆதிபுருஷ் படம் வெளியான தியேட்டர்களின் நிலையே டல் அடித்து காணப்படுகிறது.
புக் மை ஷோவில் டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் இன்று கூட புக் ஆகாமல் பச்சை நிறமே .. பச்சை நிறமே.. என பாடும் அளவுக்கு காட்சியளிக்கிறது. சில தியேட்டர்களில் மட்டும் ஆரஞ்சு வண்ணம் தென்படுகிறது. எங்கேயுமே ரெட் கலர் ஃபுல் புக்கிங்கை பார்க்க முடியவில்லை.
பாகுபலிக்கு கிடைத்த மரியாதை: தமிழ் சினிமா படங்களுக்கு கிடைத்த வரவேற்பை விட அதிகமாகவே ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்துக்கு இங்கே வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதே போன்ற வரவேற்பு தமிழ் படங்களான விக்ரம், பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் வட மாநிலங்களிலும் சுத்தமாக இல்லை.
இந்நிலையில், இந்தி இயக்குநர் இயக்கத்தில் டோலிவுட் நடிகர் பிரபாஸ் நடித்து வெளியான ஆதிபுருஷ் படத்துக்கு தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பு இல்லை என்பது இனி வரும் பிரம்மாண்ட படங்களுக்கும் இதே போன்ற சூழலை உருவாக்குமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.
பச்சை கலரில் புக் மை ஷோ: சென்னையில் புக் மை ஷோவில் தியேட்டர்களின் நிலையை பார்த்தால் ஆதிபுருஷ் படத்துக்கு பல பிரபல திரையரங்குகள் அனைத்தும் பச்சை வண்ணத்தில் பல சீட்டுகள் புக் ஆகாமல் காலியாக கிடக்கின்றன.
ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ புக்கிங் மற்ற இடங்களில் ஃபயராக இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அந்த படத்துக்கு எந்தவொரு ஆதரவும் வரவேற்பும் இல்லாதது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.
மாமன்னன் காப்பாற்றுமா?: தமிழ்நாடு தியேட்டர்கள் இந்த வாரம் வரை பெரிய படங்கள் வராத நிலையில் வறட்சியாகவே காணப்படுகின்றன. போர் தொழில் படம் ஓடும் ஸ்க்ரீன்கள் மட்டும் சீரான எண்ணிக்கையில் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
அடுத்து வர உள்ள உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படமாவது தமிழ்நாடு தியேட்டர்களை ஹவுஸ்ஃபுல்லாக மாற்றுமா? அல்லது அடுத்த மாதம் வரும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் அந்த மேஜிக்கை செய்யுமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.