லண்டன்:பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீதான, ‘பார்ட்டி கேட்’ ஊழலில், அவர் பார்லிமென்டை தவறாக வழி நடத்தியதாக, எம்.பி.,க்கள் குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, பிரிட்டனின் அப்போதைய பிரதமராக இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன், தன் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியை, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, எண் 10, டவுனிங் தெருவில் கொண்டாடினார்.
அரசு அதிகாரிகள், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி பிரமுகர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
இந்த விவகாரம் வெளியே கசிந்து பூதாகரமாக வெடித்தது. போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் குழு விசாரணை நடத்தியது.
மது விருந்து தொடர்பாக, பார்லிமென்டில் போரிஸ் ஜான்சன் பொய் தகவல்களை தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்த குழு பரிந்துரைத்தது.
பிரதமர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய போரிஸ் ஜான்சன், விசாரணை குழுவின் பரிந்துரையை அடுத்து தன் எம்.பி., பதவியையும் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், அந்த விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மது விருந்து குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததன் வாயிலாக, பார்லிமென்டை முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தவறாக வழி நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அவரை எம்.பி., பதவியில் இருந்து, 90 நாட்கள் விலக்கி வைக்கவும் பரிந்துரைந்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்