வல்லரசு நாடுகளின் ராணுவங்களில் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும், அதிநவீன தொழில்நுட்பம் உள்ள ‘எம்.க்யூ., – 9 பிரிடேட்டர்’ எனப்படும் ‘ட்ரோன்’களை அமெரிக்காவிடமிருந்து வாங்க, நம் ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 21- 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்படும், பிரிடேட்டர் ரக ட்ரோன் எனப்படும் ஆளில்லா அதி நவீன சிறிய விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காணிப்பு
இந்நிலையில், நேற்று புதுடில்லியில் ராணுவ அமைச்சகம் மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது. வானில் பறந்து தீவிர கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் தாக்குதலும் நடத்த, பிரிடேட்டர் ரக ட்ரோன்கள் மட்டுமே அதி நவீன தொழில்நுட்பங்களுடன் செயல்பட்டு வருகின்றன.அமெரிக்கா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளின் ராணுவங்களில், இந்த வகை ட்ரோன்கள் தான் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
மற்ற ஆளில்லா விமானங்களை போலல்லாது, இவற்றை மிக அதிகமான உயரத்திலிருந்து இயக்க முடியும். எதிர்தரப்பின் இலக்குகளை கண்காணித்து மிகத் துல்லியமாக கணிப்பதுடன், ஆயுதங்களை சுமந்து அவற்றை குறிபார்த்து தாக்குவதற்கும் இந்த வகை ட்ரோன்களை பயன்படுத்த முடியும்.அமெரிக்க தயாரிப்பான இந்த வகை ட்ரோன்கள், அந்நாட்டு ராணுவத்தில் பெரும் பங்களிப்பை செய்து வருகின்றன. நம் நாட்டிலும் கூட, முப்படைகளும் பயன்படுத்தும் வகையில், மத்திய தர ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணியை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஏற்கனவே செய்து வருகிறது.
அச்சுறுத்தல்
இதற்கிடையே, நம் கடற்படை அதி நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து உடனடியாக வாங்க, நீண்டகாலமாகவே முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக நம் அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பே, இந்த வகை பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்க திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய அரசு எடுத்திருந்த உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டால், இந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
சமீபத்தில் பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் தற்போது துாசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான கவுன்சிலின் ஆலோசனை கூட்டம், நேற்று புதுடில்லியில் நடைபெற்றது. ராணுவ அமைச்சகத்தின் மிக உயர்ந்த அமைப்பான இந்த கொள்முதல் கவுன்சில், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஜெனரல் அட்டாமிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் எம்.க்யூ., – 9 பிரிடேட்டர் வகை ட்ரோன்களை வாங்க, முறைப்படியான ஒப்புதலை வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 24,000 கோடி ரூபாய் ஆகும்.
இறுதி முடிவு
இதையடுத்து, இந்த கொள்முதல் கவுன்சிலின் வரையறைக் குழு ஓரிரு நாட்களில் கூடி, இந்த ஒப்பந்தம் குறித்த மற்ற விபரங்களை இறுதி செய்யும். பின், இது பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதலுக்குப் பின், இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடற்படைக்கு தான் அதிகபட்ச ட்ரோன்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதாவது, 15க்கும் அதிகமான எம்.க்யூ., – 9 பிரிடேட்டர் ட்ரோன்கள் கடற்படைக்கு கிடைக்கலாம் என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்