மணிப்பூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக கலவரங்களும், வன்முறை வெறியாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வன்முறை காரணமாக 100 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். புதன்கிழமை நடந்த வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரில் வசிக்கும் மைதேயி இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று கூறி குக்கி பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு குக்கி இன மக்களின் வாழ்விடமாகக் கருதப்படும் வனப்பகுதியிலிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் தொடர்ந்துவரும் வன்முறையைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் பலனலிக்காமல் இருக்கின்றன.
மாநிலத்தில் வன்முறை ஏற்படும் பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தாலும், வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மத்திய அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் செய்து இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார். ஆனால் அதிலும் எந்தவிதப் பயனும் இல்லை. இம்பால் நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் நேற்று இரவு இம்பாலிலுள்ள கொங்பா என்ற இடத்தில், மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டுக்கு பொதுமக்கள் தீவைத்தனர்.
அதுவும் 1,000-க்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்து தீவைத்தனர். அமைச்சர் வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி வீட்டின் நான்கு பக்கங்களிலிருந்தும் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி, வீட்டுக்குத் தீவைத்தனர். ராணுவ கமாண்டோ தினேஷ்வர் சிங் இது குறித்து ஊடகங்களிடம் பேசுகையில், “அனைத்து திசையிலிருந்தும் வெடிகுண்டுகளை வீசீனர். நிலைமை கைமீறி சென்றுவிட்டது. எங்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 1,200 பேர் சேர்ந்து வீட்டுக்குத் தீவைத்தனர்” என்றார். தீவைக்கப்படும்போது அமைச்சர் வீட்டில் இல்லை. அவர் கேரளாவுக்குச் சென்றிருந்தார்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் ரஞ்சன், “நாங்கள் அமைதியை நிலைநாட்ட முயல்கிறோம். ஆனால் சிலர் அதை விரும்பவில்லை. நான் வெளியில் சென்றிருந்தபோது, என்னுடைய வீட்டுக்குத் தீவைத்திருக்கின்றனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் அமைதிக்காகத்தான் முயன்றுகொண்டிருக்கிறேன். அமைதி ஒன்றுதான் தீர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். நான் தொடர்ந்து அமைதியை கொண்டு வரவும், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்வேன். நடந்த சம்பவத்துக்கு எந்த சமுதாயத்தையும் குற்றம்சாட்டவில்லை” என்று தெரிவித்தார்.