மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி, வருண் தவான் உடன் சிட்டாடல் என பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் செர்பியாவில் உள்ள பிரபல தேவாலயத்தில் வழிபாடு நடத்திய சமந்தா அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தனக்கு ஒரு வருடம் ஆகிறது என உருக்கமான பதிவு ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. எனது உடம்புக்குள் பல போராட்டங்கள் நடைபெற்றன. பல சவால்களைச் சந்தித்தேன். சர்க்கரை, உப்பு மற்றும் பருப்பு வகைகளைக் கூட உட்கொள்ள முடியாத சூழ்நிலை. அந்த சமயத்தில் மாத்திரையை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டேன். சினிமா துறையிலும் பல தோல்விகளைச் சந்தித்தேன். இந்த வருடத்தில் நிறை பிரார்தனைகள் மற்றும் பூஜைகளைச் செய்தேன். அந்த பிராத்தனைகள், பூஜைகள் அனைத்தும் ஆசிர்வாதங்களையும், பரிசுகளையும் எதிர்பார்த்து நான் செய்யவில்லை. மன வலிமையையும், அமைதியையும் கொடுக்கத்தான் நான் அதை செய்தேன்.
நாம் நினைத்ததுபோல் எதுவும் நடக்காது என்று இந்த ஒரு வருட காலம் எனக்கு உணர்த்தியது. சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியமில்லை. முன்னோக்கி நகர்வதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். மீண்டும் தானாக சரியாகும் என்று நாம் காத்திருக்கக்கூடாது, கடந்த காலங்களில் நடந்த சோகங்களையும் தோல்வியையும் நினைத்து அதில் மூழ்கி விடக்கூடாது, நாம் நேசிப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும்.
வெறுப்பு நம்மை பாதிக்கும் அளவுக்கு இடம் கொடுக்கக் கூடாது, உங்களில் பலர் மிக கடினமான சூழ்நிலையை சந்தித்திருப்பீர்கள், உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் சில விஷயங்களை தாமதம் செய்யலாம். ஆனால் கைவிட மாட்டார். அமைதி அன்பு மகிழ்ச்சி மற்றும் வலிமையை தேடுபவர்களை ஒருபோதும் கடவுள் கைவிடமாட்டார்” என்று பதிவிட்டிருக்கிறார். சமந்தாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.