வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : ஓடும் ரயிலில், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை, 20 வயது கல்லுாரி மாணவி தைரியமாக சண்டை போட்டு விரட்டிய நிலையில், குற்றவாளி நான்கு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், மத்திய ரயில்வேயின் ஹார்பர் வழித்தடத்தில் பயணிக்கும் புறநகர் ரயில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து பன்வெல் நோக்கி நேற்று காலை 7:30 மணிக்கு புறப்பட்டது.
மும்பையின் கிர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லுாரி மாணவி, நவி மும்பையில் உள்ள கல்லுாரிக்கு செல்ல அந்த ரயிலின் மகளிர் பெட்டியில் பயணம் செய்தார். அதில் அந்த மாணவியை தவிர வேறு யாரும் இல்லை.
ரயில் புறப்பட்ட நிலையில், திடீரென ஒரு நபர் மகளிர் பெட்டியில் ஏறினார். தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவருடன் தைரியமாக சண்டையிட்டு, அவரது பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அந்த பெண் போராடினார்.
அதற்குள் மஸ்ஜித் நிறுத்தத்தில் ரயில் நின்றது. அந்த நபர் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கி தப்பினார். அடுத்த பெட்டிக்கு சென்ற பெண், நடந்த சம்பவத்தை அங்கிருந்தவர்களிடம் விவரித்தார்.
உடனடியாக ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனிப்படை அமைத்த போலீசார், நான்கு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர், பீஹாரின் கிஷன்கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்த 40 வயதான தொழிலாளி நவாஜு கரீம் ஷேக் என்பது விசாரணையில் தெரியவந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement