மூணாறு:மூணாறு உட்பட சுற்றிலும் உள்ள ஒன்பது ஊராட்சிகளில் அடித்தளம் உட்பட மூன்று தளத்திற்கு மேல் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து கேரள உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.
இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு ஆகிய மாவட்டங்களில் அனுமதி பெற்று நடக்கும் கட்டுமான பணிகளை நிறுத்துமாறும், அந்த தாலுகாக்களில் நிலம் தொடர்பான பிரச்னைகளில் உரிமையாளர்களை கண்டறியும் வரை நிலம் கைமாற்றத்திற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும் பாலக்காட்டைச் சேர்ந்த தனியார் அமைப்பினர் கேரள உயர் நீதிமன்றத்தில் பொது வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகம்மதுமுஸ்தாக், ஷோபிதாமஸ் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு மூணாறு, தேவிகுளம், மாங்குளம், பள்ளிவாசல், உடும்பன்சோலை, பைசன்வாலி, வெள்ளத்துாவல், சின்னக்கானல், சாந்தாம்பாறை ஆகிய ஊராட்சிகளில் அடிதளம் உட்பட மூன்று தளத்திற்கு மேல் கட்டுமான பணிகளுக்கு இரண்டு வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அந்த ஊராட்சிகள் வழக்கில் சேரவும், வக்கீல் ஹரிஷ் வாசுதேவனை சட்ட ஆலோசராக நியமித்தும் கோர்ட் உத்தரவிட்டது. தவிர சுற்றுச் சூழல், பேரிடர் குறித்து ஆய்வு நடத்துவதற்கு சிறப்பு ஏஜென்சிகளை நியமிக்க வேண்டும். அதனை நியமித்ததாக அரசும், சட்ட ஆலோசகரும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இடுக்கி மாவட்டத்தில் 2018ல் மழையால் ஏற்பட்ட பேரழிவு குறித்து நடத்திய ஆய்வுகள், நடவடிக்கைகள் குறித்து மாநில, மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை, அரசு தெரிவிக்க வேண்டும் என சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement