புதுடெல்லி: அமைதி மற்றும் வளத்தை பரப்புவதே யோகாவின் நோக்கம் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு டெல்லியில் வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து, அமைதி, செழிப்பு ஆகியவற்றை பரப்புவதே யோகாவின் செய்தி என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐநா பொதுச் சபையின் துணை பொதுச் செயலாளர் அமினா முகம்மது, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்க இருக்கிறார். அவரோடு இணைந்து அங்கு நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற இருக்கிறேன். அந்த நாளை நான் எதிர்நோக்குகிறேன் என தெரிவித்தார்.
இதேபோன்ற ஒரு உணர்வை, ஐநா பொது அவையின் தலைவர் சபா கொரோசியும் வெளிப்படுத்தி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அடுத்த வாரம் ஐாநா தலைமையகத்தில் நடைபெற உள்ள 9வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியோடு பங்கேற்பதை மிகவும் எதிர்பார்க்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் இருந்து வரும் 20ம் தேதி அமெரிக்கா புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் 21ம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். இதை அடுத்து, தலைநகர் வாஷிங்டன் செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்க இருக்கிறார். 23ம் தேதி வரை அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு வந்து அந்நாட்டு அதிபர் அல் சிசியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.