மும்பை சுன்னாப்பட்டி என்ற இடத்தில் வசிப்பவர் சஞ்சய் தாக்குர். இவரின் மனைவி சரிதா. கடந்த 2010 ஆண்டு இவர்களுக்கு திருமணமானது. அதன் பிறகு கடந்த 13 ஆண்டில் 4 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் ஆண் குழந்தை இல்லை என்று கூறி தனது மனைவியுடன் அடிக்கடி சஞ்சய் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக சண்டையிட்டதால் கணவரிடமிருந்து விலகி செம்பூர் சுமன் நகரில் உள்ள தனது சகோதரன் வீட்டில் சென்று வசிக்க ஆரம்பித்தார் சரிதா.
ஆனால் அங்கேயும் அடிக்கடி வந்து சஞ்சய் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று காலையில் சஞ்சய் தனது மனைவியை பார்க்கச் சென்றார். அவரிடம் உடனே வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் சரிதா வீட்டிற்கு வர முடியாது என்று தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மிரட்டி விட்டு சென்றுவிட்டார்.
சஞ்சய் சென்றுவிட்டார் என்று நினைத்து சரிதா வீட்டில் வேலை செய்தார். ஆனால் திடீரென மீண்டும் வீட்டிற்கு வந்த சஞ்சய் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சரிதா மீது ஊற்றி தீவைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் உதவி கேட்டு சரிதா தெருவிற்கு ஓடி வந்தார். அந்த வழியாக ஆட்டோ டிரைவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். சரிதா தீயுடன் தெருவிற்கு வந்ததை பார்த்தவுடன் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் இருந்த ஒரு பயணியை கீழே இறங்க சொன்னார். உடனே பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்து சரிதாவை ஆட்டோவில் ஏற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.
சரிதாவின் உடலில் பற்றிய தீயை அணைத்து ஆட்டோ டிரைவர் சரிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். சரிதாவின் சகோதரர் அமர்சிங் இது குறித்து, “ஆட்டோ டிரைவர் அருகில் இருந்தவர்களைப் பார்த்து எனது சகோதரியை ஆட்டோவில் தூக்கி வைக்கும்படி கத்தினார். நாங்கள் என்ன செய்வது என்று திண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் விரைந்து செயல்பட்டார்” என்றார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்ணிற்கு 10 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அவரின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர். அதோடு அப்பெண்ணை விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் மொகமத் இஸ்மாயில் ஷேக்கை பாராட்டினர். மனைவிக்கு தீ வைத்த சஞ்சய் கைதுசெய்யப்பட்டார்.