மாஸ்கோ: உக்ரைன் போர் இப்போது மீண்டும் தீவிரமாக ஆரம்பித்துள்ள நிலையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த மிகப் பெரிய அணை ஒன்று சமீபத்தில் தகர்க்கப்பட்டது. இதற்கிடையே இந்த அணை தகர்ப்பு குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர் ஓராண்டிற்கு மேலாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் சில காலம் இந்தப் போர் சற்று அமைதியானது. இது குறித்து எந்தவொரு தகவலும் வராமல் இருந்தது. இதற்கிடையே இப்போது போர் மீண்டும் மெல்லத் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா ஆகிய நாடுகள் மாறி மாறி டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ் வந்த நிலையில், அப்போது கூட ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்த முயன்றதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியிருந்தது.
ரஷ்யா: இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு நோவா ககோவ்கா நகரத்தில் உள்ள அணை தகர்க்கப்பட்டது. இதனால் அருகில் உள்ள அனைத்து ஊர்களும் நீரில் மூழ்கின. இந்த நோவா ககோவ்கா தெற்கு உக்ரைனில் அமைந்துள்ளது. உக்ரைன் போர் ஆரம்பித்த கடந்தாண்டு பிப். மாதம் முதலே இந்த அணையும் சரி, இங்குள்ள பகுதிகளும் சரி ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. இங்கே உள்ள ககோவ்கா அணை தான் தகர்க்கப்பட்டது. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அணை உடைக்கப்பட்டு சில மணி நேரத்தில் பக்கத்தில் இருந்த ஊர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. உக்ரைன் போரில் நடந்த மிக முக்கிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி இந்த அணையை உடைத்துள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது. அதேநேரம் மறுபுறம் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் ரஷ்யா தான் இந்த அணையை உடைத்ததாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டது.
அணை உடைப்பு: இதற்கிடையே அணையை உடைத்தது யார் என்பது குறித்து சில பரபர தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது ககோவ்கா அணையை ரஷ்யாவே உடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேற்குலக நாடுகளின் ஆதரவு உக்ரைன் நாட்டிற்கு அதிகரித்து வரும் நிலையில், தாக்குதலைத் தீவிரப்படுத்த ஒரு காரணம் புதினுக்கு தேவைப்பட்டது என்றும் அதற்காக ரஷ்யாவே ககோவ்கா அணையை உடைத்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் நிறுவனமான குளோபல் ரைட்ஸ் கம்பியன்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களும் வல்லுநர்களும் இந்த ககோவ்கா அணையை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கே தாக்குதல் எந்த மாதிரி நடந்திருக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அணையில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த அவர்கள், எப்படித் தாக்குதல் நடந்திருக்கும் என்பது குறித்து முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.
அறிக்கை: அந்த அறிக்கையில், “இப்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்கள், வெடிப்பின் போது ஏற்பட்ட நில அதிர்வுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, அணையில் முக்கியமான இடங்களில் வெடி மருந்துகளை வைத்துள்ளனர். அந்த வெடி மருந்துகளே அணை உடைய காரணமாக இருந்துள்ளது. ரஷ்யத் தரப்பால் அணை வெடிபொருட்களால் தகர்க்கப்பட்டது என்பதை 80% உறுதியாகக் கூற முடியும்” என்று கூறியுள்ளனர்.
போர்க் காலங்களில் ஒரு அணையை வேண்டுமென்றே தகர்ப்பது என்பது சர்வதேச விதியின் கீழ் போர்க்குற்றமாகக் கருதப்படுவதாக இந்த வல்லுநர் குழுவைத் தலைமை தாங்கிய பிரிட்டிஷ் பாரிஸ்டர் கேட்ரியோனா முர்டோக் தெரிவித்துள்ளார். தனது கட்டுப்பாட்டில் இருந்த அணையை ரஷ்யா தானே தகர்த்துள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது..