மங்களூரு:-
ஆலோசனை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு நேற்று மீனவர் நலன், துறைமுகம் மற்றும் நீர் போக்குவரத்து துறை மந்திரி மங்கல் வைத்தியா வந்தார். அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதான் மந்திரி மத்ஸ்சய சம்பதா திட்டத்தின் கீழ் ஏழை மீனவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மீனவர்கள் யாரேனும் பயன் பெறவில்லை என்றால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக வேண்டும். ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் சில மீனவர்களின் குடும்பங்கள் பயன்பெறவில்லை என்று எனக்கு புகார்கள் வந்துள்ளன.
காப்பீடு திட்டம்
காப்பீடு திட்டம் என்றால் அது ஏழைகளுக்கு உதவ வேண்டும். அது பயனுள்ளதாக இல்லாவிட்டால் அந்த காப்பீட்டு திட்டத்தால் என்ன பயன்?. இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் முந்தைய பா.ஜனதா அரசு தவறிவிட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கும். இதுபற்றி பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று இழப்பீடு பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
கடந்த 10 மாதங்களாக மீனவ மக்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போதைய அரசு உரிய நேரத்தில் டீசல், மண்எண்ணெய் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க உள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தால்…
மீன்பிடி வலைகளை பழுது நீக்கும் மீனவர்களுக்கு உரிய வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். மாதத்திற்கு ஒருமுறை தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு வருவேன். அதிகாரிகளின் அலட்சியத்தால் மீனவர்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதே எனது நோக்கம். தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அதுதொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கலெக்டர் ரவிக்குமார் கூறியதாவது:-
பேரிடர் மீட்பு குழுவினர்
கடந்த பருவமழையின் போது ஏற்பட்ட கடல் அரிப்பால் உச்சிலா, பெட்டம்பாடி, முக்கச்சேரி ஆகிய கடலோரப் பகுதிகள் சேதமடைந்தன. எனவே, இந்த மழைக்காலத்தில் ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்த, தற்காலிக தடுப்பு சுவர்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எந்தவொரு பெரிய சேதத்தையும் தடுக்க, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.