உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர பிரதமரின் திறமையான நிர்வாகம்தான் காரணம் – பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருத்து

தருமபுரி: உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு இன்று உயர்ந்து நிற்க, நம் பிரதமர் மோடியின் திறமையான வழிநடத்தல் தான் காரணம் என பாஜக மாநில தலைவர் தருமபுரியில் தெரிவித்தார்.

தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்று(17-ம் தேதி) கட்சியின் மாநில துணைத் தலைவர் நரேந்திரன் தருமபுரி வந்தார்.

கட்சி நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 9 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து 10-ம் ஆண்டில் பயணத்தை தொடங்கி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் பலவற்றை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். வெளியுறவுக் கொள்கை, நாட்டின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, தொழில் துறை வளர்ச்சி போன்றவற்றை அவர் திறமையாக வழிநடத்தி வருகிறார். இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீருக்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுலா செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இந்தியா மின்னணு பணப் பரிவர்த்தனையில் சிறந்த நாடாக மாறியுள்ளது.

கரோனா காலத்தில் உலக நாடுகள் பலவும் தொற்றை கட்டுப்படுத்த திணறியபோது இந்திய அரசு தடுப்பூசி தயாரித்து இலவசமாக வழங்கி மக்களைக் காத்தது. கனவாக இருந்து வந்த தரம்மிக்க சாலை கட்டமைப்பு வசதிகள் பல லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எளிதான, இலகுவான, பாதுகாப்பான பயணத்தை மக்கள் அனுபவிக்கின்றனர். நாடு முழுக்க 12 கோடி தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

48 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 9.5 கோடி பேர் இலவச எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். அதேபோல, ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தத்தில் மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றும் பிரதமராக மோடி இருந்து வருகிறார்” இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.