சென்னை: “தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திமுக அரசை எதிர்த்துப் போராட நடிகர் விஜய் முன்வர வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஏற்கெனவே அரசியலுக்கு வருவதைப் அவ்வப்போது பிரதிபலித்து கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து பாராட்டி பரிசு வழங்கி இருக்கிறார்கள்.
தமாகா சார்பாக கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள நீட் கையேடுகளை இலவசமாக 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கினோம். எனவே, நல்ல விஷயங்களை ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைக்காக விஜய் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராட முன்வர வேண்டும்.
தமிழக மக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இன்று ஆளுகின்ற மக்கள் விரோத திமுக அரசால் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. கல்விக் கடன் ரத்து, பொருளாதாரம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாய கடன் ரத்து, விலைவாசி உயர்வு, கல்வி கட்டணம், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என்று அன்றாட ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஆளும் கட்சி மக்களைப் பற்றி கவலைப்படாத நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை கையில் எடுத்து தொடர்ச்சியாக அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மூலமாக தீர்வு காண குரல் கொடுத்து வருகின்றோம். இந்தச் சூழலில் அரசியலுக்கு வர தயாராகும் நடிகர் விஜய் தமிழக மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராடுவதற்கு முன்வர வேண்டும்.
மேலும், தேர்தலில் வாக்காளர்கள் யாரும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை அறிமுகப்படுத்தியதே திமுகதான். எனவே, இதை தடுக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நடிகர் விஜய் போராட முன்வர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.