சத்தீஸ்கர் மாநிலத்தில் உஜ்ஜவால் திவான் எனும் போலீஸ் கான்ஸ்டபிள், ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளை வைத்து அரசியல் கட்சி தொடங்கவிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. அதோடு, அடுத்துவரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் ஒட்டுமொத்த 90 இடங்களிலும் போட்டியிட முடிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய அரசியல் கட்சியைப் பதிவுசெய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட கான்ஸ்டபிள் உஜ்ஜவால் திவானும், அவரைச் சேர்ந்தவர்களும், ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஆசாத் ஜனதா என்ற கட்சியைக் கைப்பற்ற முடிவுசெய்தனர்.
அதன்படி ஆசாத் ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் உஜ்ஜவால் திவான் இது குறித்துப் பேசுகையில், “எனக்கெதிராக பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதன் காரணமாக நான் சிறைக்குச் செல்லவேண்டியிருந்தது. இப்போது எந்த அரசியல் கட்சிகளின்மீதும் நம்பிக்கையில்லை. எனவே தனியாகக் கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிட முடிவுசெய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைப்பதே எங்களின் லட்சியம்.
என்னுடைய ராஜினாமா கடிதத்தை 2021-லேயே கொடுத்துவிட்டேன். ஆனால் காவல்துறையில் அது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் நான் தேர்தலில் போட்டியிட முடியும். அதோடு கட்சியை நடத்துவதற்கான நிதி ஆதரவுக்காக க்ரவுட் ஃபண்ட் (crowdfund) திரட்ட திட்டமிட்டிருக்கிறோம். என்னைப்போன்ற பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள், ஒருதலைபட்சமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் எங்கள் கட்சியில் இணைந்திருக்கின்றனர். 80,000-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்கள், மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் 4.5 லட்சம் ஒப்பந்த ஊழியர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது” என்று கூறினார்.
மேலும், ஆசாத் ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சீவ் மிஸ்ரா, “புதிய கட்சியைப் பதிவுசெய்ய நாங்கள் விண்ணப்பித்தோம். ஆனால் அதன் பெயரில் சில எதிர்ப்புகள் இருந்ததால், ஆசாத் ஜனதா கட்சியைக் கைப்பற்ற முடிவுசெய்தோம். அதுமட்டுமல்லாமல் வரும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம்” என்றார்.
கான்ஸ்டபிள் உஜ்ஜவால் திவான், கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கீழ்நிலை காவலர்களுக்கு சம்பளவு உயர்வு, வார விடுமுறை, அனைவருக்கும் அரசுக் குடியிருப்புகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.