புதுடெல்லி: பணமோசடி சட்டங்களை வலுப்படுத்துவதற்கான கூடுதல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்களது கட்சிக்காரர்களின் பணப் பரிவர்த்தனைகளின் பதிவை வைத்திருக்கவும், அதேநேரம் சந்தேகத்துக்கு இடமான செயல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.
போலி நிறுவனங்கள் மற்றும் பணமோசடி சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளை விரைவாக கண்டறிய இந்த திட்டம் உதவும் என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
ஆனால், சில வழக்கறிஞர்கள் மத்திய அரசின் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த செயல் கட்சிக்காரர்-வழக்கறிஞரின் சிறப்பு உரிமையை பாதிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதநேரம், இதை அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியாவின் விதிமுறைகள் மற்றும் மேற்பார்வை குறித்து வரும் நவம்பர் மாதம் சர்வதேச பணமோசடி கண்காணிப்பு அமைப்பான பைனான்சியல் ஆக் ஷன் டாஸ்க் போர்ஸ் (எப்ஏடிஎப்) மதிப்பாய்வு செய்யவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “நகைக்கடைக்காரர்கள், ரியல் எஸ்டேட்முகவர்கள், பட்டய கணக்காளர்கள், நிறுவன சேவை வழங்குநர்கள் பணமோசடி தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அறிக்கை அளிக்கும் நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அடுத்ததாக தற்போது வழக்கறிஞர்களும் இணையவுள்ளனர்’’ என்றனர்.