“ஒண்ணு இங்க இருக்கு… இன்னொன்னு எங்க? அதுதாண்ணே இது?” – என்கிற வாழைப்பழ காமெடி மட்டுமல்ல, காமெடியையே கரகமாக வைத்து ஆட்டம் ஆடிய ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 34 வருடங்கள் ஆகிவிட்டது.
அக்காமெடி கரகாட்டாரர்களில் முக்கியமானவரான நடிகர் செந்திலிடம் பேசினேன்…
“கரகாட்டகாரன் வெளியாகி 34 வருசமாச்சுன்னு எல்லோரும் சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரை ‘கரகாட்டகாரன்’ படம் இன்னும் பேபியாத்தான் இருக்கு. அதுக்கு, வயசெல்லாம் ஆகல. இப்போ, ரிலீஸ் ஆகி தியேட்டர்களிebல் ஓடிக்கிட்டிருக்க மாதிரியே ஃபீல் ஆகுது. ஏன்னா, படத்தையும் பாடல்களையும் மக்கள் இப்பவும் கொண்டாடித் தீர்க்கறாங்க.
‘கரகாட்டகாரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதுக்கு இளையராஜா சாரோட இசையும் பாடல்களும்தான் முக்கிய காரணமா நான் நினைக்கிறேன். இன்றும் தமிழ்நாட்டோட எந்த ஊருல திருவிழா நடந்தாலும் ‘கரகாட்டக்காரன்’ பாடல்கள்தான் ஒலிக்குது. கரகாட்டக்காரன் பாடல்களைத் தவிர்த்துட்டு திருவிழா நடத்திட முடியுமா? அதனால, முதலில் இளையராஜா சாருக்கு எனது நன்றியை தெரிவிச்சிக்கிறேன். இரண்டாவதாக, படத்தின் இயக்குநர் கங்கை அமரன் சாருக்கும், மூன்றாவதாக எங்களுக்கு காமெடி டிராக் எழுதிய ஏ. வீரப்பன் சாருக்கும் நன்றிகள். இப்போவும், படத்தோட காமெடி டிராக் பேசப்படுறதுக்கு வீரப்பன் சார்தான் காரணம்.
நாகேஷ், சுருளிராஜன் எல்லோருக்கும் அவர்தான் காமெடி டிராக் எழுதினார். நன்றி மறப்பது நன்றன்று. எங்களுக்கு கிடைச்ச பாராட்டு, புகழ் எல்லாம் வீரப்பன் சாருக்கும் போய்ச்சேரணும். அதோட, கவுண்டமணி அண்ணனைத் தவிர வேற யாராலும் அந்த கேரக்டரைப் பண்ணிருக்க முடியாது. படத்துல மட்டுமில்ல; ஷூட்டிங்ல கேப் கிடைக்கிறப்போல்லாம் டைமிங் காமெடியில அசத்துவார். அண்ணன்கூட சேர்ந்து நடிச்சதை மறக்கவே முடியாது” என்று பழசை மறக்காதவராய் பேசும் செந்திலிடம், “நடிகர் ராமராஜன் ‘கரகாட்டக்காரன் 2’ எடுத்தால் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளாரே?” என்று கேட்டேன்.
“கங்கை அமரன் சார் ‘கரகாட்டக்காரன் 2’ படத்திற்காக என்னிடமும் வந்து பேசினார். இந்தப் படத்தில் நடிக்க யார் ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கிடலனாலும் நான் கண்டிப்பா நடிப்பேன். அதுக்கான, காரணத்தை இப்போதைக்கு சொல்ல முடியாது” என்கிறார் ஆவேசமாக.