என் கண் முன்னரே என் சொத்துகள் விரிந்து கிடக்கின்றன. என் உறவுகளும் வளைய வருகிறார்கள். ஆனால், தனிமையும், பசியுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் ஒரு நரக வாழ்க்கையை.
என் கணவர் அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இருவரும் ஓடி ஓடி உழைத்து, எங்கள் ஒரே மகனுக்கு சொத்து சேர்த்தோம். அவன் விரும்பியபடி படிக்கவைத்தோம். விரும்பிய பெண்ணையே மணம் முடித்தோம். அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தபோது, எங்கள் சொத்துகளை எல்லாம் அவன் பெயரில் மாற்றி எழுதினோம்.
இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்துவிட, அதற்குப் பின்னர் என் மகனும், என் மருமகளும் என்னை ஒரு சுமைபோல கருத ஆரம்பித்தனர். அவர் இருந்தவரை எனக்கான மரியாதை, அன்பில் குறை வைக்காமல் இருந்தவர்கள், அவருக்குப் பின் என்னை சட்டை செய்வதே இல்லை. இவ்வளவுக்கும் நான் அவர்களுக்கு எந்தச் சுமையும் தருவதில்லை. என் வேலைகளை நானே பார்த்துக்கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். சாப்பாடு தவிர, மாத்திரை, மருந்து என எனக்கென்று எந்தச் செலவுகளும் கிடையாது. வருடத்தில் ஒன்றிரண்டு முறை பண்டிகைக்கு வாங்கித் தரும் புதுத்துணியிலேயே என் மனம் நிறைந்துவிடும். இருந்தும், என் மருமகள் ஏன் என்னை சுமையாக நினைக்கிறார் என்று புரியவில்லை.
என் பேரனும், பேத்தியும்தான் எனக்கான ஆறுதலாக இருந்தனர். ஆனால், அவர்களையும் கான்வன்ட்டில் ஹாஸ்டலில் சேர்த்தார்கள் மகனும் மருமகளும். நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. ’நான் புதுசா தொழில் தொடங்கப் போறேன். என்னால இப்போ புள்ளைங்களுக்கு கவனம் கொடுக்க முடியாது. அதான் ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டேன். எங்க வீட்டு முடிவுகளை எங்க வசதிக்குத்தான் நாங்க எடுக்க முடியும். உங்க வசதிக்கு எடுக்க முடியாது’ என்று சொல்லிவிட்டார் மருமகள்.
இந்நிலையில், நாங்கள் வசிக்கும் தெருவுக்கு அருகே, என் மகன் பெரிய வீடு கட்டினான். நானும் கணவரும் அவனுக்காக சேர்த்துவைத்திருந்த ஒரு சொத்தை விற்றே அவன் அதை கட்டினான். ஆனால், என்னை அங்கு அழைத்துச் செல்லாமல், பழைய வீட்டில் தனியாக விட்டுச் சென்றுவிட்டான். ஊரில் பலரும், ‘வயசான காலத்துல அம்மாவை வீட்டோட வெச்சிக்கிறதுல உனக்கு என்ன கஷ்டம்?’ என்று கேட்டுப் பார்த்தும், மகனும் மருமகளும் மனம் இரங்கவே இல்லை. பாசம் வேண்டாம்… பாவம் என்ற கருணை கூட என் மீது இல்லை.
உள்ளூரிலேயே ஒரு ஹோட்டலில் சொல்லி, எனக்கு மூன்று வேளையும் உணவு கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள் மகனும் மருமகளும். தொடர்ந்து கடை சாப்பாடு சாப்பிடுவதால் பல உடல்நலத் தொந்தரவுக்கு ஆட்பட்டு, பசி இருந்தாலும் பல வேளைகள் வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்துவிடுகிறேன். உறவுகள் இருந்தும் உடன் வாழ முடியவில்லை. சேர்த்த சொத்தெல்லாம் முதுமைக்கு இல்லாமல் போய்விட்டது. 65 வயதாகும் எனக்கு, வாழ்வதே தண்டனையாக உள்ளது. என்ன செய்வது நான்?