நாக்பூர்: மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, காங்கிரஸில் இணைய தனக்கு வந்த ஆஃபர் குறித்தும் அதற்குத் தான் அளித்த பதில் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், முன்பு தனக்குக் காங்கிரஸில் இணைய வந்த ஆஃபர் குறித்தும் அப்போது அவர் அளித்த பதில் குறித்தும் பேசியுள்ளார். மேலும், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக பல சாதனைகளைச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பாஜக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், “60 ஆண்டுக்கால ஆட்சியில் காங்கிரஸ் செய்ததை விட, கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக இரண்டு மடங்கு அதிக பணிகளைச் செய்துள்ளது. பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. மோடி ஆட்சியில் பலர் பயனடைந்துள்ளனர்” என்றார்.
கிணற்றில் குதிப்பேன்: தொடர்ந்து பேசிய அவர், “அப்போது தான் நான் அரசியலுக்கு வந்த புதிது. அப்போது (காங்கிரஸ் கட்சியின்) ஜிச்கர் ஒருமுறை என்னிடம் வந்து, உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. நான் உங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நீங்கள் பேசாமல் காங்கிரஸில் இணைந்துவிடுங்கள். உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றார். அப்போதே அவரிடம் நான் காங்கிரஸில் சேருவதை விடக் கிணற்றில் குதிப்பேன் எனச் சொன்னேன்.
நான் எப்போதும் பாஜக மற்றும் அதன் சித்தாந்தத்தின் மீது வலுவான நம்பிக்கை வைத்திருந்தேன். தொடர்ந்து பாஜகவுக்காகவே பணியாற்றுவேன்.. அதேபோல இந்த நேரத்தில் நான் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் இருந்த போதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை கற்றுக் கொண்டேன். அதுதான் என்னை இந்தளவுக்கு அழைத்து வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது முதலே ஏகப்பட்ட முறை பிளவுபட்டுள்ளது. நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால் கடந்த காலத்திலிருந்து தான் நாம் எதிர்காலத்திற்குப் பாடம் கற்க வேண்டும். 60 ஆண்டுக்கால ஆட்சியில் காங்கிரஸ் வறுமையை ஒழிப்பேன் என்று முழங்கியது. இருப்பினும், தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவே அவர்கள் செயல்பட்டனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை.
பிரதமர் மோடிக்கு பாராட்டு: இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக மாற்றப் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை நமக்கு பேருதவியாக உள்ளது. நாட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்ததைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
நான் சில நாட்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் இருந்தேன். அங்கே அதிக மக்கள் என்னை வந்து சந்தித்தார்கள். 2024க்குள் உபி-இல் உள்ள அனைத்து சாலைகளும் அமெரிக்காவுக்கு இணையாக மாறும் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்” என்றார்.