கட்ச்: அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதி தீவிர புயலாக கரை கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் 4,600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 3,580 கிராமங்களில் நேற்று மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. 3 மாநில நெடுஞ்சாலைகளில் 600 மரங்கள் வேரோடு சாய்ந்ததால், நேற்று போக்குவரத்து தடை ஏற்பட்டது. 9 வீடுகள், 20 குடிசை வீடுகள் புயல் காற்றில் முற்றிலும் சேதம் அடைந்தன. 2 வீடுகள் , 474 குடிசை வீடுகள் ஓரளவு சேதம் அடைந்தன.
புயல் கரையை கடந்த போது கட்ச் பகுதி முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. ஆனால், பிபர்ஜாய் புயல் கரை கடந்தபோது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது என மாநில நிவாரண குழு ஆணையர் ஆலோக் குமார் பாண்டே தெரிவித்தார்.
புயல் பாதிப்பு வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து முன்கூட்டியே சுமார் 1 லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாவ்நகர் மாவட்டத்தில் மட்டும், புயல் கரையை கடப்பதற்கு முன்பாக, ஆடு மேய்த்து கொண்டிருந்த தந்தையும், மகனும், சிறு ஆறு வழியாக ஆடுகளுடன் கடந்து சென்றனர்.
அப்போது வெள்ளத்தில் சிக்கிய ஆடுகளை காப்பாற்ற முயன்றஇருவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அதனால் இவர்களின் உயிரிழப்பு புயல் பாதிப்புஉயிரிழப்பாக கணக்கிடப்படவில்லை. குஜராத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர், மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
4 நாள் குழந்தையை மீட்ட…: பிபர்ஜாய் புயலை முன்னிட்டு குஜராத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு படையினர், மீட்பு படையினர், போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், புயல் பாதிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் துவாரகா மாவட்டத்தின் பன்வாத் கிராமத்தில், பிறந்து 4 நாளே ஆன பச்சிளம் குழந்தையுடன், ஒரு பெண் பாதுகாப்பற்ற வீட்டில் வசிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை, அங்கு விரைந்த பெண் போலீஸ் அதிகாரி, பச்சிளம் குழந்தையை தன்கையில் ஏந்தி, அதன் தாய் மற்றும் குடும்பத்தினரை தனது வாகனத்தில் அழைத்து வந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தார்.
இந்த வீடியோவை ட்விட்டரில்பகிர்ந்த குஜராத் அமைச்சர் முலாபாய் பேரா, பாதுகாப்பை உறுதிசெய்வதில் பன்வாத் நிர்வாகம் விழிப்புடன் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதை மீண்டும் ட்விட் செய்துள்ள குஜராத் டிஜிபியும், போலீசாரை பாராட்டி உள்ளார்.