காந்திநகர்: குஜராத்தில் பிப்பர்ஜாய் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார்.
அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் கடந்த வியாழன் இரவு அதி தீவிர புயலாக கரை கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 4,600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 3,580 கிராமங்களில் நேற்று மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. 3 மாநில நெடுஞ்சாலைகளில் 600 மரங்கள் வேரோடு சாய்ந்ததால், நேற்று போக்குவரத்து தடை ஏற்பட்டது. 9 வீடுகள், 20 குடிசை வீடுகள் புயல் காற்றில் முற்றிலும் சேதம் அடைந்தன. 2 வீடுகள் , 474 குடிசை வீடுகள் ஓரளவு சேதம் அடைந்தன. புயல் கரையை கடந்த போது கட்ச் பகுதி முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. ஆனால், பிபர்ஜாய் புயல் கரை கடந்தபோது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்த அமித் ஷா, பின்னர் மாண்ட்வி பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். அங்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து விசாரித்த அமித் ஷா, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் பூஜ் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலுக்கு அமித் ஷா சென்றார். இந்த ஆய்வின்போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் உடன் இருந்தார்.