ஜூனகர்: குஜராத் மாநிலம் ஜூனகர் மாவட்டத்தின் மஜ்வாடி கேட் அருகே உள்ள மசூதி ஒன்றுக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை மோதல் ஒன்று ஏற்பட்டது. இதில் போலீஸார் மீது கல்வீச்சு சம்பவத்தில் பலர் காயமைடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.
அதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ஜூன் 14ம் தேதி, ஜூனகர்த் மாநகராட்சி சார்பாக, அங்குள்ள மசூதி ஒன்றுக்கு அதன் ஆவணங்களை ஐந்து நாட்களுக்குள், நகராட்சியின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 500 -600 பேர் வெள்ளிக்கிழமை மஜ்வாடி கேட் அருகே கூடினர். அவர்கள் போராட்டம் நடத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்” என்றார்.
“இந்த சம்பவம் குறித்ததகவல் அறிந்தததும் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கூடியிருந்தவர்களுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. இரவு சுமார் 10.15 மணியளவில் அங்கு கூடியிருந்தவர்கள் போலீஸார் மீது கற்களை வீசத் தொடங்கினர், கோஷமிடத் தொடங்கினர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்” என்று ஜூனகர்த் காவல் கண்காணிப்பாளர் ரவி தேஜா வதம்ஷெட்டி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தனியார் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள வீடியோவில், பொதுமக்கள் சாலைகளில் இருந்த கற்களை எடுத்து ஆக்ரோஷமாக எறிவது பதிவாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒரு துணை காவல்கண்காணிப்பாளர் உட்பட சில போலீஸார் காயம் அடைந்தனர். பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகின்றது.