சத்யா நாதெல்லா vs சுந்தர் பிச்சை.. இந்தியர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம்! ஆரம்பித்த வார்த்தை மோதல்

வாஷிங்டன்: ஏஐ துறையில் இப்போது கடும் போட்டி நிலவி வரும் நிலையில், டெக் துறையில் டாப் பொறுப்பில் இருக்கும் சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

இப்போது ஏஐ துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வருகை ஏஐ துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இப்போது உலகின் டாப் நிறுவனங்கள் ஏஐ துறையில் மிகப் பெரியளவில் முதலீடுகளைச் செய்து வருகிறது.

இருப்பினும், இப்போது டெக் துறையில் டாப் இடத்தில் இருக்கும் கூகுள் நிறுவனத்தால் ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஏஐ துறையில் தனக்கான இடத்தை பிடிக்கக் கூகுள் போராடி வருகிறது.

ஏஐ துறை: சாட் ஜிபிடிக்கு என்ன தான் கூகுள் ஊழியர்கள் அடித்தளமிட்டாலும் அதை மைக்ரோசாப்ட் தன்வசப்படுத்திவிட்டது. டெக் துறையில் விட்ட இடத்தை பிடிக்க மைக்ரோசாப்ட் இதை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பார்க்கிறது. அதேநேரம் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பார்ட் என்ற ஏஐ கருவியுடன் கூகுள் இறங்கியுள்ளது. வரும் காலங்களில் இந்த இரு நிறுவனத்திற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஏஐ துறையில் இந்தியர்களான சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுளின் பிராட் (bard) மற்றும் சத்யா நாதெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட்டின் சாட் ஜிபிடி இடையே தான் கடும் போட்டி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே சுந்தர் பிச்சை இது தொடர்பாகப் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “பொதுமக்கள் மத்தியில் என்ன விஷயம் ஹிட் அடிக்கும் என்பதை துல்லியமாகக் கண்டுபிடிப்பது அரிது.. இதில் உலக நாடுகள் தொடங்கிப் பல விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சுந்தர் பிச்சை: இப்போது கூகுளின் ஏஐ கருவிகள் சோதனை முறையிலே மக்களிடம் கொண்டு வந்துள்ளோம். வரும் காலத்தில் இவை சேர்ச் இன்ஜினின் ஒரு பகுதியாகவே மாறும். மக்கள் எந்த கேள்வியைக் கேட்டாலும் துல்லியமாகப் பதில் அளிக்க ஏஐ கருவிகளைத் தயார் செய்ய வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் மோசமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கூகுள் சில நேரங்களில் தவறான பதில்களைச் சொல்லிவிடுகிறது. இது முழு தோல்வியாகப் பார்க்க முடியாது. பல புதிய யூசர்கள் எங்கள் ஏஐ கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. எங்கள் ஏஐ கருவிகளிடம் மக்கள் புது புது கேள்விகளைக் கேட்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

2017 இல், கூகுள் ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கை அடிப்படையிலேயே சாட் ஜிபிடி உருவாக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பிராஜக்ட்களில் வேலை செய்யும் போது இதுபோன்ற பிரச்சினைகள் வருவது இயல்பானது. இருப்பினும், எங்கள் தயாரிப்புகளில் ​​தனியுரிமம் எது என்பதைப் பற்றிச் சிந்திப்போம். ஆனால் கூகுள் ஆய்வுப் பணிகளில் ஆக்டிவாக இருக்க வேண்டுமா எனக் கேட்டால் ஆம் என்றே சொல்வேன்.

பின்னால் இருக்கிறோம்: போட்டியாக உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் எங்கள் ஏஐ கருவி பிராட் சில இடங்களில் பின்னால் இருக்கிறது. நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டிய இடங்கள் உள்ளன. இருப்பினும், ஏஐ துறையில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் என இப்போதே சொல்ல முடியாது. இப்போது ஏஐ மார்கெட்டில் கடும் போட்டி இருக்கிறது. இருப்பினும், இதில் வலுவான ஒரு நிறுவனமாக உருவாகத் தேவையான விஷயங்களைச் செய்து வருகிறோம்.

 Satya Nadella vs Sundar Pichai Over AI as competition heats up

ஏஐ கருவிகளால் போலி செய்திகள் பரவும் என்பது தொடங்கி மனிதக் குலமே அழியும் என்பதை வரை பலரும் எச்சரிப்பதை நானும் கவனித்தே வருகிறேன். அதிலும் நாம் கவனம் செலுத்துவதை நிச்சயமாக உறுதிசெய்ய வேண்டும். டீப் பேக் தொழில்நுட்பம் பெரிய பிரச்சினையாக மாறும். நாம் அனைவரும் சீரிஸாக எடுத்துக் கொண்டு இதில் தீர்வுக்காக வேலை செய்ய வேண்டும்.

நாங்கள் இதில் பொறுப்பாகவே செயல்பட்டு வருகிறோம். வலுவான கட்டமைப்பை உருவாக்காமல் வெளியிட வேண்டாம் என நாங்கள் தவிர்த்த விஷயங்கள் இருக்கவே செய்கிறது. நாங்கள் எந்தவொரு விஷயத்திலும் பொறுமையாகப் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை என்று உறுதி செய்த பின்னரே வெளியிடுகிறோம்” என்றார்.

மோதல்: இந்த ஆண்டின் தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ஏஐ துறையில் மைக்ரோசாப்ட்டின் அதிரடி கூகுளை ஆட்டம் காண வைத்துள்ளது என்பது போலக் கருத்து கூறியிருந்தார். அது குறித்து கேட்ட கேள்விக்குச் சுந்தர் பிச்சை, “இந்தக் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் சொன்னார் என்று நினைக்கிறேன். மார்க்கெட்டில் போட்டி இருக்கும் போது இதெல்லாம் சாதாரணம்” என்று பட்டும் படாமல் பதிலளித்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.