மதுரை: செந்தில்பாலாஜியின் கைதை மிசாவுடன் ஒப்பிடுவதா? என்றும் அவரென்ன திமுகவின் கொள்கை வீரனா? எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
செந்தில்பாலாஜியுடன் ஒரு காலத்தில் ஒன்றாக பயணித்தவன் என்ற அடிப்படையில், அவரது சித்து விளையாட்டுகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியிடம் தூது அனுப்பி அவர் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டதால் ஸ்டாலினிடம் அடைக்கலம் தேடி சென்றவர் செந்தில்பாலாஜி என விமர்சித்துள்ளார்.
செந்தில்பாலாஜி பற்றி ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
”முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு எல்லா அரசியலும் தெரியும். உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம். நாங்கள் பார்க்காத அடக்குமுறைகளா?எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள் என்று கூறி செந்தில் பாலாஜியின் அரசியலை பற்றி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். செந்தில் பாலாஜியோடு நாங்கள் பயணித்தவர்கள் என்கிற அடிப்படையிலே அவருடைய அரசியல் சித்து விளையாட்டுகளை நாங்கள் ஆரம்ப காலகட்டத்திலே அறிந்தவர்கள்.
நான் மாணவரணி செயலாளராக பொறுப்பேற போது செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அவப்பெயர் காரணமாக அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் பதவியை ஜெயலலிதா ரத்து செய்தார்.
தற்போது செந்தில் பாலாஜியின் கைதை, மொழி போராட்டத்தை ஒப்பிட்டும், மிசா காலத்தில் நடைபெற்ற அடக்கு முறையிலே நடந்ததை ஒப்பீட்டும் மு.க.ஸ்டாலின் சொல்லி உள்ளார். இந்த விசாரணையும் மொழிப்போருக்கு இணையாக ஒப்பிடுகிற அளவுக்கு செந்தில் பாலாஜி கருணாநிதியின் குடும்பத்திலும், தி.மு.க.வில் மையப் புள்ளியாகவும் தனது மதி நுட்பத்தில் சித்து வேலையை காண்பித்து விட்டார்.
ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வில் குழப்பத்தை விளைவித்தார். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கூறினார். தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் தான் கொள்ளையடித்த பணத்தை வைத்து, கட்சி தலைமைக்கு எதிராக புதிய தலைமையை உருவாக்கி சதி திட்டம் தீட்டி, அதில் டி.டி.வி. தினகரனை முதல்-அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று ஆசை காட்டி, அவரை நடுத்தெருவில் விட்டுவிட்டார்.
செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி வீட்டு வாசலிலே தவமாய் தவமிருந்து, தூதுவிட்டார். ஆனால் அவரது அரசியல் சித்து விளையாட்டை தெளிவாக தெரிந்த காரணத்தினாலேயே எடப்பாடி பழனிசாமி அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க மறுத்துவிட்டார். அதன்பின் அவர் ஸ்டாலினிடம் அடைக்கலம் ஆகிவிட்டார்.
![Admk Ex minister RB Udhayakumar Statement about Minister Senthilbalaji Admk Ex minister RB Udhayakumar Statement about Minister Senthilbalaji](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/06/rpudhayakumarthei2-1658824645-down-1686975285.jpg)
மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று கருணாநிதி கண்டுபிடிக்காததை புதிய அரசியல் விஞ்ஞானி போல் மு.க.ஸ்டாலின் கண்டுபிடித்து மத்திய அரசிடம் பிரச்சினை செய்து உரிமையை பறி கொடுத்ததுதான் மிச்சம். செந்தில் பாலாஜிக்கு இதய வலி என்றவுடன் முதல்-அமைச்சருக்கு இதயம் ஆடுகிறது. எடப்பாடி பழனிசாமியை பற்றி முதல்-அமைச்சர் பேசுவது ஜனநாயகத்தின் அநாகரிமாகும். இதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்.
எங்கள் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முதல்-அமைச்சர் பேசிவருவதை நாங்கள் இனிமேல் பொறுத்துக்கொள்ள மாட்டோம். செந்தில் பாலாஜியை கைது செய்தால் முதல்-அமைச்சர் ஏன் பதற்றம் ஆகிறார்?. செந்தில் பாலாஜி தி.மு.கவின் கொள்கை வீரன் அல்ல, இதே போல் சாதாரண தொண்டருக்கும் பேசுவீர்களா? இந்த பல கட்சி செந்தில் பாலாஜியை சொக்க தங்கம் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்களே. அவர் என்ன தியாகம் செய்தார்? அதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.