கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம் பெற வேண்டும் என கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவரது ஆதரவாளர்கள், மொட்டை அடித்தும் அங்கபிரதட்சணம் செய்தும் கவனம் ஈர்த்துள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இப்போது காவேரி மருத்துவமனைக்கு மாறுதலாகி சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு ஓரிரு நாட்களில் பைபாஸ் சர்ஜரி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒரு சிலர் உட்பட செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்து, அங்கபிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கின்றனர். அறுவைச் சிகிச்சை முடிந்து நல்லபடியாக செந்தில்பாலாஜி வீடு திரும்ப வேண்டும் என்றும் கைது நடவடிக்கையிலிருந்து அவர் மீள வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுதல் வைத்தனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது மண் சோறு சாப்பிட்டு, மொட்டை அடித்து, தீச்சட்டி ஏந்திய நிகழ்வுகளை கரூர் நிகழ்வு நினைவூட்டுகிறது. பொதுவாக திமுகவில் இதுபோன்ற மொட்டை அடிக்கும் கலாச்சாரம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை. பகுத்தறிவு கட்சி என்பதால் திமுக தலைமையும் இது போன்ற காரியங்களை எந்தக் காலத்திலும் ஊக்குவிக்காது.

இருப்பினும் தனிப்பட்ட நம்பிக்கையின் மீது யாரும் எந்தக் கருத்தையும் திணிக்க முடியாது என்பதால் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் அன்னதானம் வழங்குதல் உட்பட சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கரூரை போலவே கோவையிலும் அவரது ஆதரவாளர்கள் இது போன்ற சிறப்பு வழிபாடுகள் நடத்த ஆரம்பித்துள்ளனர்.