கடந்த சில தினங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரம்தான் தமிழ்நாடு அரசியலைத் தாண்டி இந்திய அரசியலிலும் பெரும் பேசுபொருளாக இருக்கிறது. கடந்த 13-ம் தேதி அமலாக்கப்பிரிவு துறை அதிகாரிகள் கிரீன்வே சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். நீண்ட நேரம் தொடர்ந்த விசாரணையில் அன்றைய தினம் இரவு 2 மணியளவில் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக அமைச்சர், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் உள்ள ஆறாவது மாடியில் அறை எண் 6084-ல் அமைச்சர் சிகிச்சை பெற்றுவந்தார். அவரை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி, தமிழக அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் அமைச்சருக்குக் காலை 10.40 மணியளவில் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், அவருக்கு இதய ரத்தக் குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்புகள் இருப்பதாகவும், அவருக்கு பை பாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என்றும் பரிந்துரை செய்தனர். அரசு மருத்துவமனையின் அறிக்கையைத் தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து வந்த மருத்துவர்கள் குழுவும் அமைச்சருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்திருந்தது. அடுத்த மூன்று தினங்களில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.
மேற்கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. முதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 15-ம் தேதி இரவு 9.30 மணியளவில் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் 7-வது தளத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த தளத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். மேலும், அந்த மருத்துவமனையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அமைச்சரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
கடந்த 16-ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து அமைச்சரின் உடல்நிலை குறித்து ஒரு மருத்துவ அறிக்கை வெளியானது. அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜி மூத்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு முன்னதாக செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று கூறப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் சிகிச்சைகள் தொடர்வது ஒரு பக்கமிருக்க, எய்ம்ஸ் மருத்துவக் குழு மருத்துவர்கள் செந்தில் பாலாஜியைப் பரிசோதனை செய்யவுள்ளனர். காவேரி மருத்துவமனைக்கு வரும் அந்த குழு அமைச்சருக்கு முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ளும். செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா, அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்தும், உடல்நிலை குறித்தும் அந்த மருத்துவக் குழு விரிவான மருத்துவ அறிக்கையைத் தயார் செய்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வழங்கும் என்று மருத்துவமனை வட்டாரம் கூறுகிறது.
நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை எட்டு நாள்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அமைச்சரை விசாரிக்க ஒரு சில நிபந்தனைகள் கூறியுள்ளது. அதில், “அமைச்சர் சிகிச்சைக்காகக் காவேரி மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கருத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும்.
அமைச்சரின் உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையில் எந்த இடையூறும் ஏற்படாமல் விசாரிக்க வேண்டும். அவருக்கு போதிய உணவு, இருப்பிடம் வழங்கப்படவேண்டும். மூன்றாம் தர விசாரணை முறையைப் பயன்படுத்தக்கூடாது. அவரை எந்தவித துன்புறுத்தலுக்கு இல்லாது விசாரிக்கவேண்டும். அவரை மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். மேலும், அவருக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழங்கவேண்டும்” என்று கூறியுள்ளது.
ஒருவேளை அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றால் அடுத்த குறைந்தபட்சம் அடுத்த ஒருவார காலம் அவர் மருத்துவமனையில் இருக்கவேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல, அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஓய்வு தேவைப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடுத்த மூன்று தினங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டும் என்று அமைச்சர் மா.சு சொல்லியிருந்தார். தற்போது அறுவை சிகிச்சைக்கு முன் தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவேரி மருத்துவமனைக்கு எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் வந்தால், அவர்களின் அறிக்கை இந்த விவகாரத்தில் மிகமுக்கியமான விஷயமாக இருக்கும்.!