ஜோலார்பேட்டையில் ரயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் நேற்று முன்தின இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். இதில் கழிவறை அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். இதில் மூன்று ட்ராவல் பேக்கில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் வாலிபரை ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் கர்நாடக மாநிலம் ஹாண்டரகளா பகுதியை சேர்ந்த பாவடெப்பா(29) என்பது தெரியவந்தது. இந்நிலையில் பாவடெப்பாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்தல் குறித்து வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.