தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. மேலும் வெயில் வாட்டி வதைத்தாலும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சனலம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றும் மற்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 18 இடங்களில் 100 பாரன்ஹீட்டை வெயில் பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை, மதுரை, வேலூர், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
மேலும், கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, நாகப்பட்டினம், திருச்சி பகுதிகளில் 102 டிகிரி பாரன்ஹீட் முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது.