அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அவரது மைத்துனரான சபரீசனும் ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்த சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால அந்த ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரலே இல்லை என்று முற்றிலுமாக மறுத்தார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக பேசி வந்தார். இதுகுறித்து பேசி மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு தான் விளம்பரம் தேடி தர விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இருப்பினும் இந்த விவகாரம்
வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீர் பூத்த நெருப்பாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சில நாட்கள் கழித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை இலாகா அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றப்பட்டது, அவரது பேசியதாக வெளியான ஆடியோ உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.
இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது அதிமுக. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறைக்கு அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேல் ஏற்கனவே புகார் அளித்தார். அதன்பிறகு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய பாபு முருகவேல், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய நிதித்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் புகார் மனுக்களை அனுப்பினார்.
இந்நிலையில் இந்த ஆடியோ விகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார். அதில் ஆடியோவில் பதிவான குரல் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுடையது இல்லை என்றால் அதுபோன்ற குரலில் பதிவு செய்து குற்றம் சுமத்தியிருப்பது யார் என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாபு முருகவேல் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே செந்தில் பாலாஜி விவகாரம் திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ள நிலையில் அதிமுக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவகாரத்தையும் கையில் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.