திமுக அரசின் ஏதேச்சதிகாரம்… நீண்ட நாளைக்கு நீடிக்காது… கொந்தளிக்கும் அண்ணாமலை!

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக உள்ளவர் எஸ்.ஜி சூர்யா. மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான எஸ்ஜி சூர்யா, தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து எஸ்.ஜி.சூர்யா டிவிட் செய்திருந்தார். அதில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்திற்கு காக்கி உடை அணியாமல் வந்த மதுரை போலீசார் அவரை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எஸ்ஜி சூர்யா கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எஸ்ஜி சூர்யா கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது என குறிப்பிட்டுள்ளார்.

சமூகப் பிரச்சனைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள் என்றும், விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது என்றும். கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை அறிவாலயம் அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு என்றும் பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது என்றும் கூறியுள்ள அண்ணாமலை தங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.