தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி நடிகர் விஜய் கௌரவித்தார். சென்னை நீலாங்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் மாணவர்களிடையே பேசிய விஜய் மாணவர்களுக்கு பொதுவான அறிவுரைகளை வழங்கினார். பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும், அம்பேத்கர்,
, காமராஜர் ஆகிய தலைவர்களைப் பற்றி நன்கு படிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று மாணவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் கூற வேண்டும் என்று பேசினார்.
மாணவர்களை நாளைய வாக்காளர்கள் என்று குறிப்பிட்டு விஜய் பேசியதும் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய்யின் பேச்சு குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிடம் சமயம் தமிழ் சார்பாக பேசினோம். “நடிகராக இருக்கலாம், எந்த தொழில் செய்பவராக வேண்டுமானாலும் இருக்கலாம் அனைவருக்கும் அரசியல் கருத்துக்கள் இருக்கின்றன. ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். அதை வரவேற்கிறேன். பாஜக ஓட்டுக்கு பணம் கொடுப்பது இல்லை.
அம்பேத்கரை பற்றி மாணவர்கள் படிக்கலாம். ஆனால் ஈவெரா குறித்து படிப்பது அநாவசியம்” என்று கூறினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில் இது குறித்து ஹெச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பினோம். “அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால் வரலாம். திரைத்துறையில் இருந்து பலர் வந்துள்ளனர். டி.ராஜேந்திரன், பாக்கியராஜ் போன்றோரெல்லாம் அரசியலுக்கு வந்தவர்கள் தான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் நடிப்பதற்கு இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். ஆனால் அரசியலுக்கு வந்த போது அவர் தோல்வியையே சந்தித்தார். அதனால் சினிமாவில் இருக்கிறோம் என்பதால் அரசியலுக்கு வந்தால் ஜெயித்துவிடுவோம் என்று சொல்லிவிட முடியாது” என்று கூறினார்.