மாஸ்கோ: உக்ரைன் உள்ளிட்ட கிழக்கு நாடுகளை நேட்டோ தன்னுடன் இணைத்து வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா தனது அண்டை நாடான பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோவியத் ரஷ்யாவை எதிர்க்க 1949ம் ஆண்டு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ‘நேட்டோ’, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக, ரஷ்யாவின் முன்னாள் நாடான உக்ரைனையே தனது வசம் கொண்டு வந்துவிட்டது. தற்போது வரை சுமார் 31 கிழக்கு நாடுகள் நேட்டோ நேட்டோவுடன் இணைந்திருக்கின்றன. இந்த லிஸ்டில் புதியதாக ஸ்வீடனும் இணைய இருக்கிறது.
இந்நிலையில், தனது எல்லையை பாதுகாக்க உக்ரைனுடன் ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த போரின் ஒரு பகுதியாக தனது அண்டை நாடான பெலாரஸில் அணு ஆயுதங்களை ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளது. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. தற்போது உக்ரைனுக்கு அமெரிக்காதான் அதிக அளவு ஆயுதங்கள் மற்றும் நிதியை கொடுத்து உசுப்பேற்றி வருகிறது. இப்படி இருக்கையில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ரஷ்யா அணு ஆயுதங்களை குவித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் புதின், “இப்போதைக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். ஆனால், ரஷ்யாவின் நிலப்பகுதிக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்ததால் நிச்சயம் இது பயன்படுத்தப்படும்” என்று எச்சரித்திருக்கிறார். ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளில் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் நேட்டோவுடன் இணைந்திருந்தாலும், பெலாரஸ் தனியாக நின்று கெத்து காட்டி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பெலாரஸ் ஒரு ஏவுதளமாக செயல்பட்டது. தற்போது பெலாரஸில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் வெறும் முதல் தொகுதிதான் என்று ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை சப்ளை செய்து வந்தால் உக்ரைன் தாக்குதலை மேலும் தீவிரமாக்கும். இது அணு ஆயுத போருக்கு வித்திடலாம் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.