மதுரை ஆதீனமாக இருப்பது முட்கள் மீது இருப்பது போல் உள்ளதாக கூறியுள்ள ஞானசம்பந்த தேசிக பரமாச்சரிய சுவாமிகள்,அரசியல்வாதிகளுக்கு வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதிப்பேனே தவிர, பரப்புரைக்கு போக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்…
மதுரை ஆதீன மடத்தில், 293ஆவது மகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார்… கலகலப்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், காஞ்சிபுரம் தொடங்கி மதுரை வரையில், ஒவ்வொரு மடத்திலும் தாம் இருந்தபோது, ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி, கோவில் மற்றும் ஆதீன நிலங்களை மீட்டதாக விவரித்தார். இதற்காக, ஆக்கிரமிப்பாளர்களிடம், வசவுகளை வாங்கி கட்டிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டாலும், ஒருபோதும் எனது பணியை கைவிட மாட்டேன் என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியிடம் காணப்படும் தமிழ் உணர்வு, அதுகுறித்தான உந்துதலால், 3ஆவது முறையாக பிரதமராக வரலாம் என்றார். இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்ததை பாராட்ட வேண்டும் எனும் நோக்கில் தான், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவின்போது, பிரதமரிடம் செங்கோல் கொடுத்ததாக, மதுரை ஆதீனம் தெரிவித்தார்.
அரசியல்வாதிகளுக்கு வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதிப்பேனே தவிர, பரப்புரைக்கு போக மாட்டேன் என்றார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும், கருத்துச்சொன்னால் ரசிகர்கள் பகைத்துக் கொள்வார்கள் எனவும் மதுரை ஆதீனம் கூறினார்.
மதுரை ஆதீனமாக பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆவது குறித்த கேள்விக்கு, காஞ்சிபுரத்தில் சுதந்திரமாக நிம்மதியாக இருந்த நிலையில், தற்போது முள் மீது இருப்பது போல் உள்ளதாக மகா சன்னிதானம் தெரிவித்தார். இருப்பினும், ஆன்மீகப் பணியோடு, ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகளும் தொடரும் என உறுதிபட கூறினார்….