சென்னை: சென்னை, பெசன்ட் நகர் வண்ணான்துறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிழற்குடை சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் காயமடைந்தனர். இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
சென்னை, பெசன்ட்நகர் வண்ணான்துறை பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை பேருந்துக்காக 6 பயணிகள் காத்திருந்தனர். அப்போது திடீரென பேருந்து நிறுத்த நிழற்குடை சரிந்து அமர்ந்திருந்த 4 பெண்கள் மீது விழுந்தது. இதனால் மற்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
அருகில் இருந்த பொதுமக்கள் நிழற்குடையின் கீழ் சிக்கிய பெண்களை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் 4 பெண்களும் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்த விபத்து தொடர்பாக சாஸ்திரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காயமடைந்தவர்கள் திருவெற்றியூரை சேர்ந்த கோகிலா (69)
திருவான்மியூரை சேர்ந்த ஜெயலட்சுமி (40), வியாசர்பாடியை சேர்ந்த முத்துலட்சுமி (49), பூங்கொடி (60) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் வேளச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசோக்கின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கப்பட்டதும், நிழற்குடையின் தூண்கள் துருப்பிடித்ததால் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நிழற்குடை சரிந்து விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.